×

முதல்வருடன் மோதல் பஞ்சாப் அமைச்சர் சித்து ராகுல் காந்தியுடன் சந்திப்பு: நிலவரம் குறித்து விளக்கம்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்குடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் அம்மாநில அமைச்சர் சித்து, காங்கிரஸ் தலைவர் ராகுலை நேற்று சந்தித்து தனது தரப்பு நியாயம் குறித்து விளக்கினார். பஞ்சாப்பில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், பா.ஜ கட்சியில் இருந்து விலகிய கிரிக்கெட் வீரர் சித்து, காங்கிரசில் இணைந்தார். அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், பஞ்சாப் அரசில் உள்ளாட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு, அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டிப்பிடித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

இதில் முதல்வர் அமரீந்தர் சிங், சித்து இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மக்களவை தேர்தலில் சித்துவின் மனைவி அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடுவதற்கும் அமரீந்தர் சிங் தடையாக இருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது. இந்நிலையில் மக்களவை தேர்தலில், பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சிக்கு, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. நகர்ப்புறங்களில் வெற்றி வாய்ப்பு குறைந்தது. உள்ளாட்சி துறையில் சித்து சரியாக செயல்படாததுதான் இந்த தோல்விக்கு காரணம் என முதல்வர் அமரீந்தர் சிங் குற்றம் சாட்டினார்.  

தேர்தல் தோல்விக்கு ஒட்டுமொத்த பொறுப்பேற்பதைவிட்டு, தன்னை மட்டும் குற்றம் சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என சித்து கூறினார். இந்நிலையில் பஞ்சாப் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதில், சித்துவிடம் இருந்து உள்ளாட்சி துறை பறிக்கப்பட்டு, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஒதுக்கப்பட்டது. 8 ஆலோசனைக் குழுவில் இருந்தும் சித்து நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்து வந்த சித்து, காங்கிரஸ் தலைவர் ராகுலை நேற்று சந்தித்து பேசினார். அப்போது தனது தரப்பு நியாயம் குறித்த கடிதத்தையும் அளித்தார். அதில் பஞ்சாப் அரசியல் நிலவரத்தை அவர் விளக்கியுள்ளார். ராகுல், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா, மூத்த தலைவர் அகமது படேல் ஆகியோருடன் இருக்கும் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Tags : meeting ,Rahul Gandhi ,Chief Minister ,Punjab , Chief Minister, Conflict, Punjab Minister, Siddhu Rahul Gandhi, Meeting
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...