×

மேற்குவங்க சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்துறை அறிக்கை பா.ஜ.வின் சதி மாநில ஆட்சியை கைப்பற்ற முயற்சி: திரிணாமுல் குற்றச்சாட்டு

கொல்கத்தா: ‘‘மேற்கு வங்க அரசுக்கு, உள்துறை அமைச்சகம் அனுப்பிய அறிக்கை பா.ஜ.வின் தீவிர சதி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான திட்டம்’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திரிணாமுல் கடிதம் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ தொண்டர்கள் இடையே கடும் மோதல் நடந்து வந்தது. இது தேர்தலுக்குப் பின்பும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை பா.ஜ மற்றும் திரிணாமுல் தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் பா.ஜ தொண்டர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால் மேற்குவங்கத்தில் பதற்றம் நிலவியது.

இதையடுத்து மேற்குவங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று அனுப்பியது. அதில், ‘‘மேற்குவங்கத்தில் தேர்தலுக்குப்பின்பும் வன்முறை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. இது மாநிலத்தில் சட்ட ஒழுங்கு தோல்வி அடைந்துள்ளதை காட்டுவதாக உள்ளது. சட்டம் ஒழுங்கு விதிமுறைகளை மாநில அரசு பின்பற்றி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்’’ என கூறியிருந்தது.  இதற்கு மேற்குவங்க தலைமைச் செயலாளர் மாலேகுமார் அனுப்பிய பதில் கடிதத்தில், ‘‘அனைத்து வன்முறை சம்பவங்களிலும் தாமதமின்றி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும் மாநில அமைச்சருமான பார்த்தா சட்டர்ஜி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள ஆலோசனை அறிக்கைக்கு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பா.ஜ.வுக்கு எதிராக செயல்படும் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற சதி நடப்பதுபோல் தெரிகிறது. மேற்கு வங்க அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி, ஜனநாயகம் மற்றும் அரசியல்சாசன விதிமுறைகளுக்கு எதிராக மேற்குவங்க ஆட்சியை கைப்பற்ற மிகப் பெரிய சதிதிட்டம் நடக்கிறது. பா.ஜ குண்டர்கள் வன்முறையை தூண்டி மாநிலம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். உள்துறை அமைச்சகத்துக்கும், பா.ஜ கட்சிக்கும், ஒரே நபர்தான் தலைமை வகிக்கிறார். அதனால் பா.ஜ விரும்புவதை, உள்துறை அமைச்சகம் கண்ணை மூடிக்கொண்டு அமல்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

மோடி, அமித்ஷாவுடன் ஆளுநர் சந்திப்பு:
மேற்குவங்கம், மத்திய அரசு இடையே மோதல் எழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘‘மேற்குவங்க நிலவரம் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விளக்கினேன். இதன் விவரங்களை வெளியே சொல்ல முடியாது. மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவது பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை’’ என்றார்.

பாஜ கடையடைப்பு போராட்டம்:
மேற்கு வங்கத்தில் பாஜ தொண்டர்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக கூறியும் பாஜ சார்பில் நேற்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி 12 மணி நேர கடையடைப்பு போராட்டமும் நடந்தது.

Tags : West Bengal ,Trinamool , West Bengal, law and order problem, internal report
× RELATED ஊழல், வன்முறையை விரும்பும் திரிணாமுல் கட்சி: மம்தா மீது மோடி கடும் தாக்கு