×

அரசு துறை வாகனங்களை பழுதுபார்க்க தனியார் பணிமனைகளுக்கு அங்கீகாரம்: அரசு நடவடிக்கை

சென்னை: அரசுத்துறை வண்டிகளுக்கு பழுதுபார்க்கும் வகையில் தனியார் பணிமனைகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக வாகன பராமரிப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் வருவாய்துறை, பள்ளிக்கல்வித்துறை, தொல்லியல்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத்துறை, கூட்டுறவுத்துறை, எரிசக்தித்துறை, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, சட்டத்துறை, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, காவல்துறை, இந்துசமய அறநிலையத்துறை, போக்குவரத்துத்துறை போன்ற அரசுத்துறைகள் உள்ளன.

இதில், பணியாற்றும் அதிகாரிகளுக்கு அரசு வாகனம் வழங்கியுள்ளது. ஆய்வுக்கு செல்லும் போதும், களப்பணி மேற்கொள்ளும் போதும், அவ்வப்போது நடக்கும் ஆலோசனை கூட்டங்களுக்கு செல்வதற்கு என பல்வேறு விதமான பணிகளுக்கு இந்த வாகனங்களை அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்தப்படும் வாகனங்களை தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை கண்காணித்து வருகிறது. மேலும் அரசு கொடுக்கும் வாகனங்களில் பழுது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில் அதை சரிசெய்வதற்கு, மாநிலம் முழுவதும் ஆங்காங்குள்ள தனியார் பணிமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது.அவ்வாறு அங்கீகாரம் பெற்ற பணிமனைகளுக்கு சென்று அரசுத்துறைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வாகனத்தை சரிசெய்துகொள்ளலாம். இந்நிலையில் இவ்வாண்டு அரசுத்துறை வாகனங்களை பழுது பார்ப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கும் பணியில் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு அரசுத்துறைகளைச் சார்ந்த வாகனங்களில், பெரும் பழுதுகள், மின்பணிகள், அப்போல்சரி, சர்வீசிங், சிறு பழுதுகள், ஒட்டு வேலை தகரப்பணிகள், வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் செய்ய, தமிழ்நாட்டிலுள்ள தனியார் தானியங்கிப் பட்டறைகளுக்கு அக்டோபர் 2019 முதல் நவம்பர் 2021 வரை இரண்டு ஆண்டுகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை பழுதிற்கும் தனித்தனியாக விண்ணப்பம் அளிக்க வேண்டும். விண்ப்பப் படிவங்களை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ரூ.590 செலுத்த வேண்டும். அஞ்சல் மூலம் பெறுவதற்கு ரூ.640 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை ெபறுவதற்கு ஜூன் 28ம் தேதி கடைசிநாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினத்தில் மாலை 4 மணிவரை வழங்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : workshops , Government department, private work, recognition
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை