×

பவானிசாகர்-பவானி வரை குழாய் பதித்து குடிநீர் திட்டங்களாக மாற்றியமைக்க வேண்டும்: கீழ்பவானி விவசாயிகள் நல சங்கம் வலியுறுத்தல்

சென்னை: கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி  வெளியிட்ட அறிக்கை: பவானி சாகரிலிருந்து பவானி வரையிலான 70 கி.மீ. தூரத்திற்கு ஆற்றின் இருமருங்கும் பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் உள்ளன. இவை போக கொடிவேரி அணைக்கு அருகாமையில் பெருந்துறை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு நீர் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கூட்டுக் குடிநீர்த்திட்டங்கள் அனைத்திற்கும் விநாடிக்கு 20 கனஅடி என்ற அளவில் அணையிலிருந்து தண்ணீர் எடுத்தால் போதுமானது. ஆனால், இன்று ஆலைப்பயன்பாட்டிற்கும், அனுமதியற்ற பாசனங்களுக்கும் சேர்த்தே முறைகேடாகத் தண்ணீர் எடுக்கும் பொருட்டு அணையிலிருந்து ஆற்றின் வழியாக விநாடிக்கு 200 கனஅடி என்ற அளவில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஆலைகளால் மாசுபடுத்தப்பட்ட இந்த நீரே மக்களுக்கு குடிநீர் என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது.

முறைகேடான ஆதாயம் பெறுவது போய்விடும் என்பதற்காக நியாயமான இந்த கோரிக்கை ஏற்கப்படாமல் உள்ளது. மக்களின் நலன் கருதி, இருந்து வரும் கூட்டுக்குடிநீர்த் திட்டங்களையும், இனி வரவிருக்கும் பெருந்துறைக் கூட்டுக்குடிநீர்த் திட்டததையும், அணையிலிருந்து நேரடியாக குழாய் வழியாக குடிநீர்க் கொடுக்கும் திட்டங்களாக மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கையையும் இதரக் கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் வரும் 23ம் தேதி ஈரோட்டில் கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு மாநாடு நடைபெறும். இதில் 1 லட்சம் பாசனப் பயனாளிகள் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாடு பவானிப்பாசன வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். அரசு இயந்திரத்தை திரும்பிப் பார்க்க வைக்கும்.

Tags : Pavani Sagar ,Bhavani ,Kilavani Farmers Welfare Association , Bhavani Sagar-Bhavani, Kelavani, Farmers Welfare Society
× RELATED பவானி நகராட்சியில் குடிநீர் விரிவாக்க திட்ட பணி ஆய்வு