திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர இலவச ஆட்டோ: முதன்மைக்கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை: அரசு தொடக்க பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து செல்ல இலவச ஆட்டோ வசதியை முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உதவியாக அமைந்திருக்கிறது. அதன்படி, கிராமப்பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு சுமார் ஒரு கிமீ தொலைவில் இருந்து பள்ளிக்கு வர வேண்டிய நிலையில் உள்ள மாணவர்களை, தினமும் அழைத்து வர இலவச ஆட்டோ வசதி ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, திருவண்ணாமலை ஒன்றியத்தில் வேங்கிக்கால் புதூர், உடையானந்தல், மெய்யூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச ஆட்டோ வசதி நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, கோட்டாம்பாளையம் கிராமத்தில் இருந்து வரும் 10 மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆட்டோவை, முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்தார். அதேபோல், உடையானந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செட்டிக்குளம் குடியிருப்பு பகுதியில் இருந்து 24 மாணவர்களை அழைத்து வர இலவச ஆட்டோ வசதி செய்யப்பட்டுள்ளது.  ஆட்டோ கட்டணத்தை, ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதியில் இருந்து செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் சுமார் 25 பள்ளிகளில் இதுபோன்ற வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Chief Executive Officer ,district ,Tiruvannamalai , Thiruvannamalai, Free Auto, Chief Executive Officer
× RELATED ஆட்டோவில் இருந்து விழுந்து பள்ளி மாணவி பலி