×

தமிழக அரசை 4 பேர் மட்டுமே ஆட்டிப்படைப்பதால் பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மனக்கசப்புடன் இருக்கிறார்கள்: திவாகரன் பேட்டி

மன்னார்குடி: தமிழக அரசை 4 அமைச்சர்கள் ஆட்டிப்படைப்பதால் மேலும் பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மனக்கசப்புடன் இருக்கிறார்கள் என்று திவாகரன் கூறினார். அண்ணா  திராவிடர் கழக  2ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சியின்  பொதுச்செயலாளர் திவாகரன்  மன்னார்குடி ருக்குமணிக்குளம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்து கட்சி அலுவலகத்தில் நேற்று கொடியேற்றினார். பின்னர், திவாகரன் அளித்த பேட்டி: ஜெயலலிதா விரும்பாத பாஜக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்த காரணத்தினால் தான் தேர்தல்களில் அதிமுக மிக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியால் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் கூட அதிமுகவை வெற்றி பெற வைக்க முடியவில்லை. தோல்வியை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும்.

அதிமுக வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. தினகரன் ஒரு அரசியல் கோமாளி. அவர் ஒரு மூட்டைப் பூச்சி போல் இருந்து கொண்டு தனது சுயநலத்திற்காக தமிழக அரசியல் குட்டையை குழப்பி கொண்டிருந்தார். இந்த தேர்தலில் தினகரன் என்ற மூட்டைப் பூச்சியை மக்கள் நசுக்கி எறிந்து விட்டனர். அவரை நம்பி சென்ற அப்பாவி தொண்டர்களை, தலைவர்களை தேர்தலில் பலிக்கடாவாக ஆக்கி அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டார். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டுமென ராஜன் செல்லப்பா கூறியிருப்பது சரியான கருத்து. அவரை போல பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மனக்கசப்பில் உள்ளனர்.

4 அமைச்சர்கள் தான் தமிழக அரசை ஆட்டி படைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒற்றை தலைமை பிரச்னை குறித்து விவாதிக்க உடனடியாக பொதுக்குழுவை கூட்டி அதில் தொண்டர்களின் கருத்தை உள்வாங்கி முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணமுடியாத எடப்பாடி பழனிசாமி 8 வழி சாலை திட்டத்தை கொண்டு வருவதில் முக்கியத்துவம் கொடுப்பது ஏற்புடையதல்ல. தமிழக போலீசார் துணையோடு கெயில் நிறுவனம் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் இயந்திரங்களை இறக்கி பைப் லைன்களை புதைப்பது கண்டனத் துக்குரியது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு திவாகரன் கூறினார்.

Tags : ministers ,interview ,Tamils ,government ,Divakaran , The Tamil Nadu government, only four, ministers, MLAs. Resentment
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...