×

மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை மத்திய, ஜப்பானிய குழு ஆய்வு: முதற்கட்டமாக ரூ.15 கோடியில் சுற்றுச்சுவர்

திருப்பரங்குன்றம்: மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மத்திய மற்றும் ஜப்பானிய நிதி குழுவினர் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் 224.42 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய கடந்த டிச. 2018ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கடந்த ஜனவரி 27ல்  பிரதமர் நரேந்திரமோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக மருத்துவமனை அமைவதற்கான இடத்தை மாநில அரசு ஒதுக்கீடு செய்த பின், மண் பரிசோதனை, மின்சாரம், நெடுஞ்சாலை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் பிரதான் மந்திரி சசவத் சுரக்ஷா யோஜன் இயக்குனர் சஞ்சய் ராய் தலைமையில் மத்திய நிதி குழுவினர், ஜப்பானை சேர்ந்த அதிதி பூரா தலைமையில் நிதி குழுவினர், தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்கக இணை இயக்குநர் சபிதா, மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மருத்துவமனை அமைவதற்கு ஏதுவாக நெடுஞ்சாலை, மின்சாரம், தண்ணீர் வசதிகள், இடப்பரப்பளவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது ஜப்பானிய குழுவினர் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தின் நடுவில் செல்லும் இந்தியன் ஆயில் பெட்ரோலிய குழாய் இணைப்பையும் பார்வையிட்டனர். தொடர்ந்து, முறையான நிதியை கடன் தொகையாக வழங்குவதற்கு ஜப்பானிய மற்றும் மத்திய குழுவினர் எழுத்துப்பூர்வமான அறிக்கையை இன்னும் சில நாட்களில் வெளியிடுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்கக இணை இயக்குநர் சபிதா கூறும்போது, ‘‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தற்போது மாநில சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசுக்கு ஒதுக்கி வழங்குவதற்கான பணி நடந்து வருகிறது. இதனால் எய்ம்ஸ் பணிகள் ஏதும் பாதிக்காது. முதல்கட்டமாக 224.42 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சுவர் கட்ட ரூ.15 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கி 3 மாதங்களில் நிறைவடையும்’’ என்றார்.

Tags : center ,Japan ,region ,Madapur ,phase , Madurai Toppur Area, AIs, Central and Japanese Study
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!