×

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வசதிகள் இல்லை விசாரணையில் தலையிடுகிறார் அமைச்சர்: உயர் நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் மனு தாக்கல்

சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு எந்த வசதியையும் அரசு செய்து தரவில்லை என்று கூறி தமிழக அரசு மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சிலை கடத்தல் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டு அந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், 2018 நவம்பர் 30ம் தேதி பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற்றார். இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அவரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை கடந்த 2  ஆண்டுகளாக தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை என்று  பொன்மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில் சிலை கடத்தல் பிரிவுக்கு எஸ்.பி. பதவி உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரியின் கீழ் பணியாற்றுபவர்களை எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்வரியிடமும், கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங்கிடமும் வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு அமைச்சரும், டிஜிபியும் விசாரணையில் தலையிடுகிறார்கள். குறிப்பிட்ட 4 வழக்குகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள கூடுதல் டிஜிபி ஆர்வம் காட்டுகிறார். 2017ம் ஆண்டு உத்தரவுபடி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்ற வேண்டுமென்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பல மாவட்டங்களின் வழக்குகள் மாற்றப்படவில்லை. இதுதொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில், 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதவிர 3 லட்சம் சிலைகள் தொடர்பான ஆய்வுகள் செய்ய வேண்டிய நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்குக்கான வசதிகளை அரசு செய்து கொடுக்கவில்லை. தற்போதைய குழுவில் 21 பெண் காவலர்கள் பணியில் இருந்தும், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் அவதிப்படுகிறார்கள். திருச்சி சிறப்பு முகாமிற்கு அலுவலகத்திற்கு துப்புரவு பணிக்கு கூட நிதி ஒதுக்குவதில்லை. சிறப்பு பிரிவு தேவைப்படும் 8 ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவர்களுக்கான வாகன வசதி, உட்கட்டமைப்பு வசதி என்று எதுவும் செய்து கொடுக்கவில்லை.

நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் தொடர்ந்து அரசு அவமதித்து வருகிறது. எனவே, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Minister ,investigation ,smuggling department ,Manikkavell , Statue Prevention Division, No facilities, Investigation, Intervention, Minister, Ponnu. Manikkavell filed petition
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்