×

சுஷ்மா சுவராஜூக்கு ஆளுநர் பதவி?

புதுடெல்லி: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, மாநில ஆளுநராக நியமிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ஆளுநராக இருப்பவர் நரசிம்மன். இவர் இங்கு நீண்ட காலமாக ஆளுநராக இருக்கிறார். இவர் மாற்றப்படலாம் என பல முறை கூறப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. இந்நிலையில் ஆந்திரா ஆளுநராக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை (67) நியமிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகிள்ளன. வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு கடந்த மக்களவை தேர்தலில் இவர் போட்டியிடவில்லை.

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைவர்கள் யாரையும் தேர்தலில் நேரடியாக களத்தில் இறக்க வேண்டாம் என பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஏற்கனவே முடிவெடுத்திருந்தனர். அதன்படி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என சுஷ்மா சுவராஜ் அறிவித்திருந்தார். இந்நிலையில், சுஷ்மா சுவராஜூக்கு ஆந்திர ஆளுநர் பதவி வழங்கி கவுரவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு நியமிக்கப்பட்டால், அது தென் மாநிலங்களில் பல அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும். ஆந்திரா, தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் பா.ஜ தனது செல்வாக்கை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, சுஷ்மா சுவராஜ் தனக்கு மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவி வேண்டும் என்று கேட்பதாகவும் ஒரு தகவல் டெல்லியில் உலா வருகிறது.

Tags : Sushma Swaraj , Sushma Swaraj, Governor, Designation?
× RELATED புதுடெல்லி மக்களவை தொகுதி பாஜ...