×

வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான சந்தேகம் களையப்படாவிட்டால் சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுக்கும் அபாயம் ஏற்படும்: சரத் பவார் எச்சரிக்கை

மும்பை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,  ‘‘வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான சந்தேகம் களையப்படாவிட்டால், பொதுமக்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கும் அபாயம் ஏற்படும்’’ என்று எச்சரித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்தன. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றன. இதனால், பல்வேறு கட்சிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளன. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நேற்று தனது கட்சியின் 20வது ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது; மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து டெல்லியில் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் முன்னிலையில் எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தவிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு இதுகுறித்து பல நிபுணர்களிடம் பேசினேன். வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் விரும்பும் வேட்பாளர் இருக்கும் பொத்தானில் அழுத்திய பிறகு ஒப்புகை சீட்டில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்க முடிகிறது. ஆனால் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும். இதில் என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து மக்கள் மனதில் சந்தேகம் இருக்கக்கூடாது.

தாங்கள் ஒருவருக்கு போட்ட ஓட்டு மற்றவருக்கு சென்றுவிட்டது என்று மக்கள் நினைக்க அனுமதிக்கக் கூடாது. இப்போது வேண்டுமானால் மக்கள் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சட்டம் ஒழுங்கை தங்களது கையில் எடுக்கக்கூடும். அதனை அனுமதிக்கக் கூடாது. பாஜ தேசிய உணர்வுகளை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களின் பிரச்னைகளை முன்வைத்து தேர்தலை சந்தித்தன. மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங்கிற்கு தேர்தலில் போட்டியிட பா.ஜனதா டிக்கெட் கொடுத்தது மிகவும் கவலையளிக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் காங்கிரசுடன் சேரும் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தனித்து செயல்படும். இவ்வாறு சரத் பவார் கூறினார்.

Tags : Sharad Pawar , Voting machine, suspicion, law order, people's hands, danger, Sarat Pawar, warning
× RELATED சரத் பவார் படத்தை அஜித் பவார் அணி பயன்படுத்த தடை..!!