×

பெங்களூரு நிதி நிறுவனத்தின் சார்பில் எம்எல்ஏ, அதிகாரிகளுக்கு 400 கோடி ரூபாய் லஞ்சம்: வாட்ஸ் அப்பில் உரிமையாளர் கதறல், பணம் கட்டிய ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

பெங்களூரு: பெங்களூரு நிதி நிறுவனத்தின் சார்பில் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.400 கோடிக்கு மேல் லஞ்சம் வழங்கியுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு சிவாஜிநகர்  சரகத்திற்கு உட்பட்ட கமர்ஷியல் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஐ.எம்.ஏ நகைக்கடை. பிரபலமான இந்த நகைக்கடையின் உரிமையாளர் மன்சூர் கான். சமீப காலங்களாக இந்த நகைக்கடையின் மேல்தளத்தில் ஐ.எம்.ஏ என்ற பெயரில் நிதி  நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. செய்தித்தாள் விளம்பரங்களில் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகளவு வட்டி தரப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

மேலும் சிவாஜிநகர் மட்டும் அதை சுற்றியுள்ள மக்களிடம் இந்த விளம்பரத்தை கொண்டு சென்று தங்கள் நிறுவனத்தில் அதிகளவு பணத்தை முதலீடு செய்யும்படி செய்தனர். குறைந்தது ரூ.50 ஆயிரத்தில் தொடங்கி லட்சம், கோடி வரை முதலீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த சிவாஜிநகர் பொதுமக்கள் சுமார் 2000க்கும் அதிகமானவர்கள் ஐ.எம்.ஏ நிதி நிறுவனத்தில் தங்களது பணத்தை லட்சம் லட்சமாக முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் ரூ.1 லட்சத்திற்கு ரூ.3 ஆயிரம் வட்டியாக வாடிக்கையாளர் வங்கி கணக்கிற்கு வந்தது. சமீப காலமாக இந்த தொகை வருவது நின்றுவிட்டது. முதலீடு செய்தவர்கள் நிறுவனத்தின் உரிமையாளரான மன்சூர்கானை தொடர்பு கொண்டு 2, 3 மாதங்களாக வட்டி தொகை வரவில்லை என்று விசாரித்தனர். ஆனால் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை வாடிக்கையாளர்களின் வாட்ஸ் ஆப் மற்றும் முகநூல் கணக்கிற்கு மன்சூர் கானிடமிருந்து ஒரு ஆடியோ வந்தது. அதில் பேசிய மன்சூர் கான், நிதி நிறுவனம் நடத்தி அதிகளவு நஷ்டம் ஏற்பட்டதால், பணத்தை திரும்பிக் கொடுக்க முடியாமல் போய்விட்டது. மத்திய, மாநில அரசியலில் உள்ள சில அரசியல் பிரமுகர்கள், லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்தனர். அவர்களை சமாளிக்க கோடிக் கணக்கில் லஞ்சமாக கொடுத்தேன். லோக்கல் எம்.எல்.ஏ ஒருவருக்கு ரூ.400 கோடியும், பி.டி.ஏ அதிகாரி ஒருவருக்கு கோடி கணக்கிலான ரூபாய் ரொக்கப்பணமும் கொடுத்து ஈடுகட்டியுள்ளேன்.

வாடிக்கையாளர்களின் பணம் முழுவதும் நான் குற்றம் சாட்டியவர்களிடம்தான் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சரியாக பணம் கொடுக்க முடியவில்லை. உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ள நான், தற்கொலை முடிவை தேடிக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் மன்சூர்கான் நமக்கு மோசடி செய்துவிட்டார் என்று அறிந்து நிதி நிறுவனத்தின் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் நிதி நிறுவனத்தின் முன்பு கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்ய லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

Tags : MLA ,Bangalore , Bangalore Financial Institute, MLA, Officer, Bribery, Watts Up, Owner, Karthol
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...