×

ராஜராஜசோழன் ஆட்சி பற்றி சர்ச்சை பேச்சு இயக்குனர் ரஞ்சித்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு: போலீசிலும் புகார்

கும்பகோணம்: ராஜராஜசோழன் ஆட்சி குறித்து இயக்குனர் ரஞ்சித் பேசிதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் கடந்த 5ம் தேதி இரவு நடந்தது. இதில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், ‘‘ தமிழகத்தில் ஜாதிய கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்துள்ள பகுதி தஞ்சை டெல்டா பகுதி. விவசாய நிலங்கள் எங்கெல்லாம் இருந்ததோ, அங்கெல்லாம் சாதியம் மிக இறுக்கமாக இருந்தது என வரலாறு சொல்கிறது. ராஜராஜசோழன் காலம் தான் பொற்காலம் என்பார்கள்.

ஆனால் ராஜராஜசோழன் ஆண்ட காலம் தான் இருண்ட காலம் என நான் சொல்கிறேன். இந்த மண்ணிலிருந்து சொல்றேன். எத்தனையோ பேர் சொல்றாங்க ராஜராஜசோழன் எங்கள் சாதி என்று. மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் தலித் நிலம் பறிக்கப்பட்டது ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் தான். சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது இந்த ஆட்சி காலத்தில் தான். 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றி மங்களவிலாஸ் என வைத்து கொண்டு மிகப்பெரிய அயோக்கியத்தனம் செய்தது ராஜராஜசோழன் காலத்தில் தான்.என்றார்.

இந்த சர்ச்சை பேசுக்கு பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று கடும் எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் ரஞ்சித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து பலர் பதிவிட்டிருந்தனர். இது குறித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகி பாலா, தஞ்சை எஸ்பி மகேஸ்வரனிடம் நேற்று அளித்த புகாரில், ‘‘ராஜராஜ சோழன் ஆட்சி குறித்து சாதியின் அடிப்படையிலும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் இயக்குனர் ரஞ்சித் பேசியுள்ளார். அவரது பேச்சு இறையாண்மைக்கு எதிராக உள்ளதுடன் சாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. எனவே பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Speech ,Ranjith , Rajarajasolan regime, controversy, director Ranjith, protest, police, complaining
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி