இரட்டை தலைமைக்கு எதிராக எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி எதிரொலி மாவட்ட செயலாளர், தலைவர்களுடன் இபிஎஸ் ரகசிய பேச்சு

சென்னை: அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமைக்கு எதிராக எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதையடுத்து கட்சி பிரச்னைகள் குறித்து விவாதிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தனக்கு ஆதரவாக இருக்கும்படி மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், கட்சி முன்னணியினரை முதல்வர் எடப்பாடி ரகசியமாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு கூடும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட 38 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த ஒரு தொகுதியிலும் (தேனி) துணை முதல்வரும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து மத்திய பாஜ தலைமையிலான ஆட்சியில் மத்திய அமைச்சர் பதவி வாங்க ஓபிஎஸ் முயற்சி செய்தார். அமைச்சர் பதவி வழங்க பிரதமர் மோடியும் சம்மதம் தெரிவித்தார். ஆனால், முதல்வரும் அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் மூத்த உறுப்பினரும் மாநிலங்களவை எம்பியுமான வைத்திலிங்கத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால்தான் ஓபிஎஸ் மகனுக்கும் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அதிமுகவில் யாருக்கும் மத்திய அமைச்சர் பதவி கொடுக்க கூடாது என்று கூறினார். இதனால் மத்திய அமைச்சர் பதவி கைநழுவி போனது. இதனால் அதிமுகவில் எடப்பாடி - ஓபிஎஸ் அணிகள் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏற்பட்டதற்கு கட்சியில் உள்ள இரட்டை தலைமை (ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒழுங்கிணைப்பாளர் இபிஎஸ்) தான் காரணம் என்றும், மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைமையின் கீழ் அதிமுக கட்சி செயல்பட வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இரண்டு நாட்களுக்கு முன் பகிரங்கமாக பேட்டி அளித்தார். இவரது கருத்துக்கு குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரனும் ஆதரவு தெரிவித்தார். இதேபோன்று பல எம்எல்ஏக்கள், இந்த கருத்தை வலியுறுத்தி கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுபோன்ற ஒரு சூழலால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. மேலும், அதிமுக இரண்டு தலைமையின் கீழ் செயல்பட்டாலும் இரண்டு தலைமையும் ஒற்றுமையாக செயல்படாமல், தனி தனி கோஷ்டியாகவே செயல்பட்டு வருகின்றனர். இதனால், அதிமுக கட்சியின் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே, தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளதாக அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.அதேபோன்று, அதிமுக 2ம் கட்ட தலைவர்கள், தொண்டர்கள் எதிர்ப்பை மீறி பாஜ, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்ததுதான் தோல்விக்கு மற்றொரு காரணம் என்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்களும் பகிரங்கமாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால், அதிமுக தலைவர்கள், எம்எல்ஏக்கள், பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது என்று கட்சியின் தலைமை திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, உள்கட்சி பிரச்னைகள் குறித்து விவாதிக்க நாளை (12ம் தேதி) அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி முன்னணி நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என்று ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் கூட்டாக நேற்று முன்தினம் அறிவித்தனர். தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட பிரச்னைக்கு நடுவில், நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் ஏற்பட்டுள்ள படுதோல்வி, உள்கட்சி பிரச்னை, உள்ளாட்சி தேர்தல், மாநிலங்களவையில் கிடைக்க வாய்ப்புள்ள 3 எம்பி சீட் யாருக்கு வழங்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. ஆனால், அதிமுக முன்னணி தலைவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் உள்ளது. அதனால் கட்சியில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்க உடனடியாக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் வலியுறுத்தி வருகின்றர்.

இதுகுறித்து அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அதிமுகவில் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவும், இரண்டு முறை செயற்குழுவும் கூட்ட வேண்டும் என்பது அதிமுகவின் சட்ட விதியாகும். கடைசியாக 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இரண்டு பேரும் இணைந்து கட்சியை வழி நடத்துவார்கள் என்று அந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஒன்றரை ஆண்டாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை. கடந்த டிசம்பர் மாதம் கஜா புயலால் தமிழகத்தின் பல பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தது. நிவாரண பணிகளில் சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்கள் ஈடுபட்டனர். அதனால் 2018ம் ஆண்டு பொதுக்குழுவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2019ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டு இருந்தது.

அதன்படி, நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு இந்த மாதம் இறுதிக்குள் கூட்டுவது குறித்து முடிவு செய்யப்படும். அதற்கான தேதியும் இறுதி செய்யப்படும்” என்றார். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டால் கட்சிக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்பதை அனைத்து நிர்வாகிகளும் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். அதனால், அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி கடந்த சில நாட்களாக ரகசியமாக பேசி வருகிறார். அப்போது, நாளை நடைபெறும் கூட்டம் மற்றும் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தான் வேண்டும். ஜெயலலிதா முதல்வர் பதவி மற்றும் பொதுச்செயலாளர் பதவி என இரண்டையும் சேர்த்து வகித்து வந்தார். அதனால் கட்சி கட்டுக்கோப்பாக இருந்தது. அதே போன்று முதல்வர் தலைமையில் கட்சி செயல்பட்டால்தான், வரும் நாட்களில் அதிமுகவை சிறப்பாக வளர்க்க முடியும் என்று வலியுறுத்தி பேச வேண்டும்” என்று இபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுபோன்ற நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் தொடர்ந்து ஓரங்கப்பட்டு வருவதால் கட்சியில் இனி நமக்கு செல்வாக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதை ஓபிஎஸ் அணியினரும் உணர்ந்து வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி தந்திரம்


தமிழகத்தில் முதல்வர் பதவியையும், அதிமுகவில் கட்சி தலைமை பதவியையும் 2021ம் ஆண்டு வரை தன்னிடம் (எடப்பாடி) தான் இருக்க வேண்டும் என்று தந்திரமாக காய் நகர்த்தி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதன்படி, தேர்தல் முடிந்தவுடன் ஜூன் 10ம் தேதி சட்டமன்ற கூட்டம் தொடங்கும் என்ற கூறப்பட்டது. அதிமுகவில் தற்போது கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டமன்றத்தை கூட்டினால் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் தனக்கு எதிராக திரும்பி விடுவார்கள் என்பதால் சட்டமன்ற கூட்டத்தை கூட்டாமல் மேலும் தள்ளி வைக்க முடிவு செய்து விட்டார். அடுத்து, அதிமுக பொதுக்குழுவை உடனடியாக கூட்டினால் முன்னணி நிர்வாகிகள் பிரச்னை ஏற்படுத்தி கட்சிக்குள் குழப்பம் வரும் என்பதால், முதலில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தை 12ம் தேதி கூட்ட முடிவு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் அவர்களின் கருத்தை கேட்டு, அதை நிவர்த்தி செய்ய முதல்வர் எடப்பாடி முடிவு செய்வார். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டி, கட்சி தலைமை பதவியையும் (ஒற்றை தலைமை) தனக்கு கிடைக்கும் வகையில் செய்துவிடலாம் என்று தந்திரமாக செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags : District Secretary ,EP , Dual Head, District Secretary, EPS, Secret Talk
× RELATED விடுதலைப் புலிகளை ஆதரித்துப்...