×

வேறு கட்சிக்கோ, மன்றங்களுக்கோ போகாமல் தடுக்க அதிமுகவில் வாரிசுகளுக்கு பொறுப்பு வழங்க வேண்டும்: எம்எல்ஏ ராஜன்செல்லப்பா அடுத்த அதிரடி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே நடந்த அதிமுக நிர்வாகிகள்  கூட்டத்தில்  ‘மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இடம் அளிக்காவிட்டால், வேறு கட்சிக்கோ அல்லது ரசிகர் மன்றத்திற்கோ  செல்லும் நிலை உருவாகும்’ என அதிமுக தலைமைக்கு  ராஜன் செல்லப்பா எம்எல்ஏ சூசகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 8ம் தேதி பேட்டியளித்தார். இது அதிமுகவில் பெரும் புயலை கிளப்பியது.

அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரனும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து கட்சி, தேர்தல் முடிவு குறித்து அதிமுகவினர் யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அதிரடியாக அறிவித்தனர். இதற்கிடையில், திருப்பரங்குன்றம் அருகே நிலையூர்  கைத்தறிநகர் பகுதியில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜன்செல்லப்பா தனது ஆதரவாளர்களுடன் நேற்று உள்ளாட்சி தேர்தல் குறித்த  ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பேசிய ராஜன்செல்லப்பா, ‘‘திருப்பரங்குன்றம் தொகுதியில் கடின உழைப்பு இருந்தும் வெல்ல முடியவில்லை. தோல்வியைச் சந்தித்தோம். உள்ளாட்சி தேர்தலில் உழைப்பவர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.  கட்சியில் மூத்த உறுப்பினர்களுக்கு தலைமை மதிப்பு அளிக்கவேண்டும். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி முடிவு எடுக்க வேண்டும். மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இடம் அளிக்காவிட்டால், வேறு கட்சிக்கோ, ரசிகர் மன்றத்திற்கோ செல்லும் நிலை உருவாகும்’’ என்றார்.

கூட்டத்தில் சூசகமாக, ‘‘மூத்த உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு இடம் வழங்க வேண்டும்’’ என்ற கோரிக்கையை வைத்து ராஜன் செல்லப்பா பேசியது, அங்கிருந்த அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை எம்பி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திரும்பியதாக கூறப்படுகிறது.

Tags : MLA ,Rajan Sallappa ,parties , AIADMK, MLA RajanCallappa
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா