×

தமிழகத்தில் உள்ள கோயில்களில் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  கோவில்கள் மற்றும் அவை அமைந்துள்ள ஊர்களில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணங்களை வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயில் அறங்காவலர் சேதுராமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், பெரியபாளையம் மற்றும் எல்லாபுரம் ஊர்கள் வழியாக கோயிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணமும், அப்பகுதியில் வாகன நிறுத்த கட்டணமும் ஜி.டி.மாயாண்டி என்பவர் சட்டவிரோதமாகவும், அரசின் அனுமதி இல்லாமலும் வசூலித்து வருகிறார். எனவே, சட்ட விரோதமாக நுழைவு மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: பவானி அம்மன் கோயில் திருவிழாவுக்காக வருபவர்களுக்கு உரிய தங்கும் வசதி, உணவு வசதி, தரிசன வசதிகளை இந்து சமய அறநிலையத்துறையும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகளும் செய்து தரவேண்டும். இந்த கோயில் திருவிழாவையொட்டி பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தரப்பட்ட ஒப்பந்தம் முடிந்த நிலையில் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பார்க்கிங் கட்டணம் மட்டுமே வசூலிக்க ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணம் வசூலிக்க தரப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து சட்டவிரோதமாக பார்க்கிங் மற்றும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.   எனவே, அரசிடம் எந்த அனுமதியோ அல்லது அங்கீகாரமோ பெறாமல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்படுகிறது. தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம், வாகன கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு 30 நாட்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். அவ்வாறு வசூலிக்கப்படும் தொகை அப்பகுதி மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதை அந்தந்த மாவட்ட வருவாய் கோட்டாச்சியர்கள் கண்காணித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அறிக்கையை பெற்றவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். நீதிமன்றத்தின் இந்த  உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களுக்கு பிறகு தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : fishermen ,temples ,Tamil Nadu ,government ,Supreme Court , In Tamil Nadu, farewell, Tamilnadu Government, High Court
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...