×

திருவெறும்பூர் அருகே காவிரியில் 11.81 ஹெக்டேரில் மாட்டுவண்டி மணல் குவாரி துவங்கியது

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லைக்குடியில் காவிரி ஆற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி  இன்று துவங்கியது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தடை விதித்திருந்தது.  இதனால் தமிழக அரசு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடியவில்லை.இதனால் கடுமையான மணல் தட்டுப்பாடு  ஏற்பட்டதோடு மணல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. மேலும் திருட்டுத்தனமாக அரசு அனுமதி இல்லாமல் டூவீலர் முதல் டாரஸ் லாரிகள் வரை  மணல் கொள்ளை அமோகமாக நடந்து வந்தது. திருவெறும்பூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி மணல் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் விவசாய காலங்களில் விவசாயப் பணியையும் மற்ற நாட்களில் மாட்டுவண்டிகளில் மணல் ஏற்றியும் தங்களது பிழைப்பை நடத்தி வந்தனர். ஆனால் விவசாயம் பொய்த்துப் போன நிலையில் தற்போது மணல் குவாரி இல்லாததால் இவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் திருவெறும்பூர் பகுதியில் மணல் குவாரி அமைக்க வேண்டும் என மாட்டுவண்டி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

அதன் அடிப்படையில்  திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லை குடி பகுதியில் காவிரி ஆற்றில் மேடாக உள்ள 11.81 ஹெக்டேர் பரப்பில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மணல் எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகஅரசு மாட்டுவண்டி மணல் குவாரி இன்று முதல் தொடங்கியது.இந்த குவாரியில் இருந்து 2 வழிகளில் மணல்கள் எடுத்துச் செல்லப்படும்.  அதில் ஒன்று சர்க்கார் பாளையம்  கல்லணை சாலை வழி,  மற்றொன்று திருவானைக்காவல்  கல்லணை செல்லும் சாலை. இந்த மாட்டு வண்டி குவாரி அதிகாலை 5 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறும்.  மேலும் முதன்முறையாக மாட்டு வண்டி கட்டணமாக ரூ. 105  வசூலிக்கப்படுகிறது.  அந்த கட்டணம் டிஜிட்டல் முறையில் இயந்திரத்தின் மூலம்  வசூலிக்கப்படும்.  மேலும் ஒருவருக்கு  ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கப்படும், இந்த குவாரி இரண்டு வருட காலம் செயல்படுத்துவதற்கு அனுமதி பெற்று உள்ளது.மேலும் இந்த மணல் குவாரியிலிருந்து  2 வழியாக  சாலைகளில் மணல் மாட்டு வண்டிகள் செல்லப்படுவதால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.  மேலும் இந்த குவாரி முழுநேரம் செயல்படுவதால் திருச்சி மாவட்டத்தில் மணல் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : cattle quarry ,Thiruvarur ,Cauvery , Tiruvarambur, Cauvery, Cowwandi, Sand Quarry
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...