×

எந்த வசதியும் ஏற்படுத்தி தரவில்லை: தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

சென்னை: தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு எதிராக சிலைக்கடத்தல் தடுப்புப்பரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான  வழக்குகளை விசாரிக்கும் வகையில் 2017-ம் ஆண்டு ஜூலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.-யாக பொன் மாணிக்கவேலை நியமித்து, அவருக்கு தேவையான காவலர்கள், உட்கட்டமைப்பு, வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தமிழக  அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் சிலை கடத்தல் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டு அந்த வழக்கை நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்த நிலையில், 2018 நவம்பர் 30 ஆம் தேதி பொன்  மாணிக்கவேல் ஓய்வுபெற்றதையடுத்து, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும் சிலைக்கடத்தல் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனிடையே, ஐஜி பொன் மாணிக்கவேல்  தனது பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி, யானை ராஜேந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த  உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்து, ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கி, அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து உத்தரவிட்டது. இந்த  தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், சிலை கடத்தல் வழக்கை பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழக  அரசின் அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் தேவையான காவலர்கள், வாகன வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தரவில்லை என குற்றம்சாட்டிய சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல், தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிஜிபி  ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். சிலைக்கடத்தல் தொடர்பாக 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சிலை கடத்தல்  தொடர்பான 43 வழக்குகளின் ஆவணங்களை காணவில்லை; தேவையான 8 ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்கள், வாகனம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : facility ,Tamil Nadu ,Government , No facility has been provided: The case against the Tamil Nadu Government is a case of contempt of court
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...