×

ஈரோடு அருகே இயற்கை வேளாண்மை முறையை மேற்கொண்ட விவசாயி

ஈரோடு: ஈரோடு மாமரத்துப்பாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் இயற்கை வேளாண்மை மூலம் கரும்பு, சின்ன வெங்காயம், உளுந்து ஆகியவற்றை ஒரே நேரத்தில் பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார். மாமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவருக்கு செங்கோடம்பாளையம் பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. வீரிய பயிர் ரகங்களை விதைத்து அவற்றுக்கு செயற்கை உரம், ரசாயன பூச்சிக்கொல்லிகள் தெளித்து இருமடங்கு லாபம் பெறலாம் என்ற வழக்கமான சிந்தனையில் இருந்து விலகி நிற்கிறார் தங்கவேலு. மேலும் பாரம்பரிய பயிர் வகைகள் அவற்றுக்கு இயற்கை உரம், இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்து அதிலும் லாபம் ஈட்டலாம் என்பதை அவர் நிரூபித்து வருகிறார். 2 ஏக்கர் நிலத்தில் வழக்கத்திற்கு மாறாக 8க்கு 8 அடி இடைவெளி விட்டு பாரம்பரிய கரும்பு பயிரை பயிரிட்டுள்ளார். அவற்றில் ஊடு பயிராக சின்ன வெங்காயம் மற்றும் உளுந்தை பயிரிட்டுள்ளார்.

 பஞ்ச கவ்யம், நாட்டுமாட்டு சாணக்கரைசல் உள்ளிட்டவற்றை தூவல் பாசனம் மூலம் பயிர்களுக்கு செலுத்துகிறார். மண்ணுக்கும், மனிதனுக்கும் தீங்கு விளைவிக்காத இதுபோன்ற இயற்கை விவசாய பயிர்களுக்கு சந்தைகளில் போதிய வரவேற்பு இருந்தாலும் செயற்கை உரங்கள் மூலம் பயிரிடப்பட்டு பளபளவென சந்தைக்கு வரும் காய்கறிகள் மீதான மோகம் இன்னும் பலருக்கு குறையவில்லை என்கிறார் தங்கவேலு. இவரின் விவசாயமுறைக் குறித்து அறிந்த சிலர் அவரிடம் நேரடியாக வந்து சந்தை விலையை விட கூடுதல் விலைக் கொடுத்து வாங்கி செல்வத்தையும் அவர் குறிப்பிடுகிறார். தன்னை போன்றே மற்ற விவசாயிகளும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கும் தங்கவேலு இதனால் பூமி நஞ்சாவதை தடுக்க முடியும் என்றும் ஆரோக்கியமான ஒரு தலைமுறையை உருவாக்க முடியும் என்றும் உறுதிபட கூறுகிறார்.


Tags : Erode , Erode, Natural Farming, Farmer
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...