×

தேனி மாவட்டத்தில் புதுமை கசாப்பு கடைகளில் பணிபுரிந்து கணவனுக்கு உதவும் பெண்கள்

*ஆடு, மீன், கோழிகளை வெட்டி வருமானம் ஈட்டுகின்றனர்

தேனி : கணவனுக்கு உதவியாக ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிக் கடைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பலரும் வேலை செய்து வருகின்றனர். பெண்கள் என்றால் வழக்கமாக காய்கறிக்கடை, பெட்டிக்கடை, பலசரக்கு கடை, ஓட்டல், ஜவுளிக்கடை மட்டுமின்றி ஆண்கள் நடத்தும் அத்தனை தொழில்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பல இடங்களில் கூடையில் காய்கறி, மீனை தெருத்தெருவாக சென்று விற்பனை செய்யும் பெண்களை பார்த்திருப்போம்.

ஆனால், தேனி மாவட்டத்தில் பெண்கள், ஒரு படி மேலே சென்று கோழி இறைச்சி கடைகள், ஆட்டு இறைச்சி கடைகளிலும் கணவனுக்கு உதவியாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த கடைகளில் கல்லாவில் அமர்வது மட்டுமல்ல அவர்களின் வேலை. கோழியை அறுத்து சுத்தம் செய்து எடை போட்டு வெட்டிக் கொடுப்பது, ஆட்டை கணவன் அறுக்கும் போது ரத்தத்தை கிண்ணத்தில் பிடித்து, குடல், இரைப்பையினை சுத்தம் செய்து, கொடுப்பது போன்ற வேலைகளை பெண்கள் முன் நின்று செய்கின்றனர்.

கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் ஆட்டுக்கறி, எலும்பை வெட்டி கொடுப்பது,  தலை மற்றும் கால்களை வாட்டி சுத்தம் செய்து சமையலுக்கு ஏற்ற வகையில் வெட்டிக் கொடுப்பது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் பெண்கள் தான் செய்கின்றனர். சில பெண்கள் இன்னும் ஒரு படி மேலே போய், பெரிய அளவில் செயல்படும் மீன் கடைகள், கோழிக்கடைகளில் அவற்றை வெட்டி விற்பனை செய்யும் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். கணவன் வீட்டில் எப்படியெல்லாம் வாழப்போகிறோம் என்று கனவுகளுடன் திருமணம் முடித்து வரும் பெண்கள், வாழ்க்கையை மட்டுமின்றி கணவனின் கஷ்டத்தை பங்கு போட்டுக் கொள்ளும் பாங்கு சபாஷ் போட வைக்கிறது.

தேனியில் மட்டும் ஆடு, கோழி, மீன் இறைச்சி கடைகளில் 100க்கும் மேற்பட்ட  பெண்கள் பணிபுரிவதாக சுகாதாரத்துறை கணக்கு சொல்கிறது. மாவட்டம் முழுவதும் இந்த  எண்ணிக்கை நான்கு இலக்கத்தை தாண்டி விடும்.  இதற்கென தனிக்கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளே  வியந்து போய் உள்ளனர். நமக்கும் இவர்களை போல் வியப்பு ஏற்பட்டாலும், இந்த  பெண்களின் மனோ தைரியத்திற்கும், தியாக உணர்வுக்கும் ஒரு சல்யூட்  அடிப்போம்.

Tags : Women ,butcher shops ,Theni district , Butcher shop, theni, house wife, husband
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்