×

தேனி ரேஷன் கடைகளில் கருக்கல் அரிசி விநியோகம்... பெண்கள் கடும் அதிருப்தி

தேனி: தேனி ரேஷன் கடைகளில் கருக்கல் கலந்த அரிசி விநியோகம் செய்யப்படுவதால், பெண்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேனியில் அல்லிநகரம் பகுதிக்கு உட்பட்ட பல ரேஷன் கடைகளில் கடந்த வாரம் விநியோகிக்கப்பட்ட அரிசி சமையலுக்கு ஏற்றதாக இல்லை. இந்த அரிசியில் கருக்கல் (சரியாக விளையாத கருப்பு கலரில் உள்ள அரிசி) மிகவும் அதிகளவில் கலந்துள்ளது. இந்த கருக்கலை நீக்குவது சுலபமான காரியம் இல்லை. மிகவும் சிரமப்பட்டு கருக்கலை நீக்கிய பின்னர் சமைத்தால், சாதத்தில் லேசான வாடையும் உள்ளது. இந்த அரிசியில் சமைத்த சாதத்தை சாப்பிட முடியவில்லை.

இது குறித்து தேனி பகுதி பெண்கள் கூறியதாவது: தேனியில் அல்லிநகரம் பகுதியில் நாங்கள் வழக்கமாக வாங்கும் கடையில் விநியோகிக்கப்படும் அரிசியில் தான் இது போன்ற பிரச்னை உள்ளதா என்று நாங்கள் நினைத்து வேறு பகுதியில் வசிக்கும் எங்கள் உறவினர்களிடம் கேட்டோம். அவர்களும் இந்த மாதம் வழங்கப்பட்ட அரிசி மிகவும் கருக்கல் கலந்து உள்ளது. இந்த அரிசியில் சமைக்கவும் முடியாது. இட்லி, தோசைக்கும் பயன்படுத்த முடியாது என கூறினர். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டால், அரசு எங்களுக்கு என்ன வழங்குகிறதோ, அதனை தான் நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும்’ என தெரிவித்து விட்டனர். இவ்வாறு கூறினர்.

Tags : tea ration stores ,women , Ration shop, rice
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது