×

பவானிசாகர் அணை முன்பு பாலம் கட்டும் பணி தாமதம்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை முன்பு புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், பண்ணாரி சாலையில் பவானி ஆற்றின் குறுக்கே உள்ள ஆற்றுப்பாலம் பழுதடைந்தததால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாகனப்போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாகனங்கள் தொட்டம்பாளையம் ஆற்றுப்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டதால் புங்கார், பெரியார்நகர், காராச்சிக்கொரை, சுஜில்குட்டை, கல்லம்பாளையம், அல்லிமாயாறு, தெங்குமரஹாடா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பவானிசாகர் செல்ல பல கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்ட ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக பழுதடைந்த பாலம் அருகே மண்பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் பழுதடைந்து ஓராண்டு ஆகியும் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்காததால் கிராம மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் மண்பரிசோதனை நடைபெற்று வருகிறது. உடனடியாக புதிய பாலம் கட்டுமானப்பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.

Tags : bridge ,construction work ,dam ,Bhavani Sagar , Bhavani Sagar Dam
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...