×

ரூ.1,400 கோடி சொத்துகளை கொண்டுள்ள மதுரை ஆதீன பீடத்தை மடக்க நித்யானந்தா மீண்டும் திட்டம்?

மதுரை: ரூ.1,400 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ள மதுரை ஆதீன மடாலய பீடத்தை நித்யானந்தா மீண்டும் நுழைந்து கைப்பற்றி விடாமல் தடுக்கும் நோக்குடன் ஆதீனம் புது வாரிசை 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவசரமாக நியமித்து கொண்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஆவணி மூலவீதியில் ஆதீன மடாலயம் அமைந்துள்ளது. இதனை 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். மதுரை, தஞ்சை மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளிலும் ரூ.1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. மடாலயத்தின் ஆதீனகர்த்தர் பதவிக்கு அவரால் வாரிசாக நியமிக்கப்படுபவர் அடுத்தடுத்து ஆதீன பொறுப்பேற்பது வழக்கம்.

இப்போதுள்ள ஆதீனகர்த்தர் 1975ம் ஆண்டு இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டு, முந்திய ஆதீனம் மறைந்ததும் 1980ல் ஆதீனமாக பொறுப்பேற்றார். இவர் தனது வாரிசாக முதன்முதலில் தூத்துக்குடியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரை நியமித்தார். சிறிது காலத்தில் அவரை நீக்கினார். சுவாமிநாதன் துறவறம் கலைந்து சொந்த ஊருக்கு திரும்பினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2012ல் பெங்களூரூ பிடதி ஆசிரம நித்யானந்தாவை வாரிசாக ஆதீனம் நியமித்து பரபரப்பூட்டினார். பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கியவரை பாரம்பரியமிக்க மடாலய இளைய ஆதீனமாக பட்டம் சூட்டியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் தமிழக அரசின் அறநிலையத்துறை மூலம் நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நித்யானந்தவை நீக்கிவிட்டதாக 2013ல் ஆதீனம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் பிறகு ஆதீனத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்த சூழலில், மூன்றாவது முறையாக 2016ல் ஆதீனம் தனது வாரிசாக சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பருக்கு பட்டம் சூட்டினார். சிறிதுகாலத்தில் இவர் இளைய ஆதீன பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதனால் இளைய ஆதீன பொறுப்பில் யாரும் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தது. இந்த சமயத்தை பயன்படுத்தி நித்யானந்தா ஐகோர்ட் கிளையில், ‘‘ஆதீன மடத்திற்குள் இளைய ஆதீனமாக சென்று பூஜைகள் செய்வதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் ‘‘ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா இளைய ஆதீனம் என்ற எண்ணம் இல்லாமல், இந்திய குடிமகன் என்ற முறையில் தனிநபராக சென்று வரவேண்டும், மடத்துக்கு செல்லும் தேதியை முன்கூட்டியே விளக்குத்தூண் காவல்நிலைய ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்பது போன்ற நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இதன்படி ஆதீன மடத்திற்கு நித்யானந்தா நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.

க்ஷநித்யானந்தா எந்த ரூபத்திலும் மீண்டும் ஆதீன மடாலயத்திற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதில் ஆதீனம் உறுதியாக உள்ளார். இந்த சூழலில் புது வாரிசும் நியமிக்காமல், 2 ஆண்டுக்கும் மேலாக சமாளித்து வந்தார். இனிமேலும் புது வாரிசு நியமிக்க தவறினால், நித்யானந்தா ஏதாவது வழிதேடி புகுந்து விடக்கூடாது என்ற சந்தேகம் ஆதீனத்திற்கு எழுந்ததாக கூறப்படுகிறது. நித்யானந்தா சூழ்ச்சியை முறியடிக்கும் நோக்குடன் அதிரடியாக புது வாரிசு நியமித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த பின்னணியில் தான் திருவாடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த சுந்தரமூர்த்தி என்பவர் திடீரென்று இளைய ஆதீன பொறுப்புக்கு 4வது ஆளாக நியமிக்கப்பட்டுள்ளார். இனி, நித்யானந்தா ஆதீன மடத்தில் நுழைந்து, பொறுப்புகளை கைப்பற்ற நினைக்கும் திட்டத்தை கைவிடுவாரா, அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

Tags : Nithyananda ,Madurai Adinea , Nithyananda, Madurai atinam
× RELATED நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2...