×

திருவெறும்பூர் அருகே காந்தலூரில் குடிநீருக்காக தினமும் 4 கி.மீ. அலையும் அவலம்

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்காமல் 4 கி.மீ அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருவெறும்பூர் அருகே காந்தலூர் ஊராட்சி பகுதியில் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் குடிப்பதற்கு என நல்ல குடிநீர் கிடையாது. உப்பு தண்ணீர் மட்டுமே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் வருகிறது. அதுவும் இந்த கோடை காலத்தில் அதிக அளவு தொட்டியில் போதிய அளவு தண்ணீர் ஏறாது. இதனால் தண்ணீர் பைப்புகளில் தண்ணீர் வருவதில்லை. அதனால் பைப்புகள் உள்ள பகுதியில் 3 அடி 4 அடி அளவிற்கு பள்ளம் பதித்து. டியூப் போட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்துகின்றனர். மேலும் இவர்கள் மழை காலத்தில் சாலையோரத்தில் ஊற்று போட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்தும் தண்ணீர் மட்டுமே நல்ல தண்ணீராக உள்ளது. மேலும் இந்த பகுதியில் திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ செந்தில்குமார் தொகுதி வளர்ச்சி நிதியில் மினி குடிநீர் தொட்டி அமைத்தார். இதுபோல் இந்த பகுதியில் 8 குடிநீர் தொட்டிகள் உள்ளது. அந்த தொட்டிகள் அனைத்துமே செயல்படாமல் உள்ளது. இதில் சில மினி குடிநீர் தொட்டிகளுக்கான மின் மோட்டார் திருடுபோயும், சுவிட்ச் போர்டுகள் பழுதடைந்தும் காணப்படுகிறது. இந்த 8 மினி குடிநீர் தொட்டிகளுக்கு போர்வெல் போட்டு அமைப்பதற்கு ரூ.12 லட்சம் வரை செலவாகி உள்ளது.

அதற்கு 10 இடத்தில் குறைத்த செலவில் அடி பம்ப்புகளை போட்டுக் கொடுத்து இருந்தால் அது பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றும், தேவையில்லாமல் மக்கள் வரிப்பணம் வீணாவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து நல்ல குடிநீர் வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலெக்டர் மற்றும் அரசியல் பிரதிநிதிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் காந்தலூர் ஊராட்சி அலுவலகம் அருகே 2013-14ம் ஆண்டில் கனிமங்கள் நிதியின் கீழ் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி ரூ.9 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இந்த தொட்டியிலிருந்து ரூ.5 கட்டணம் செலுத்தி 20 லிட்டர் வரை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர். ஆனால் அப்படி வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் 2 நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்ததாகவும், அதன் பிறகு அது செயல்படாமல் போனது. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருவெறும்பூர் சூரியூர் சாலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் என பைப் லைன் செல்கிறது. ஆனால் அதிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள காந்தலூருக்கு அந்த தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தேடி 4 கி.மீ. தூரம் துப்பாக்கி தொழிற்சாலை, எச்ஏபிபி, சூரியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் தங்களுக்கு வேறு எந்த வசதியும் செய்து தரவேண்டாம். தற்போது நல்ல குடிநீர் மட்டும் கிடைத்தால் போதும். அதனை அரசு உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வேதனையுடன் தெரவித்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் காந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நல்ல தரமான குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

8 மினி குடிநீர்

தொட்டிகளுக்கு போர்வெல் போட்டு அமைப்பதற்கு ரூ.12 லட்சம் வரை செலவாகி உள்ளது. அதற்கு 10 இடத்தில் குறைத்த செலவில் அடி பம்ப்புகளை போட்டுக் கொடுத்து இருந்தால் அது பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றும், தேவையில்லாமல் மக்கள் வரிப்பணம் வீணாவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Kandalur , Tiruvarambur, drinking water
× RELATED செங்கல்பட்டு காந்தலூரில் உள்ள...