×

ஷிகர் தவானின் சதத்தால் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதம் விளாசிய அணி என்ற பெருமையை தட்டிச் சென்ற இந்திய அணி!

லண்டன்: நேற்றைய ஆட்டத்தில் ஷிகர் தவானின் சதத்தால் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதம் விளாசிய அணி என்ற பெருமையை இந்திய அணி தட்டிச் சென்றுள்ளது. ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கலைகட்டி வருகிறது. இதில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 14வது லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியாவுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடியதால் முதல் 10 ஓவர்களில் இந்தியா 41 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து தவான் அதிரடியில் இறங்க அவருக்கு பக்க பலமாக விளங்கிய ரோகித் அரை சதத்தை பதிவு செய்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய தவான், ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார்.

அத்துடன் உலகக்கோப்பை தொடர்களில் அவரின் 3வது சதமாகவும் இது பதிவானது. தவான் ஆட்டமிழந்ததும் வழக்கத்திற்கு மாறாக ஹார்திக் பாண்டியா 4வது வீரராக களமிறங்கினார். வந்ததும் அதிரடியில் மிரட்டியதால் அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதனிடையே கோலி 50வது அரை சதத்தை பதிவு செய்தார். அரை சதம் என எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்து வந்த தோனி, 14 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பிஞச் நிதானமாக ஆடி சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 61 ஆக இருந்தபோது பிஞ்ச் ரன் அவுட் ஆனார்.

மறுமுனையில் மெதுவாக ஆடி வந்த வார்னர் 56 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மேலும், ஸ்டீவ் ஸ்மித்தும் 69 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் கை ஓங்கியது. நடுவரிசையில் வந்த வீரர்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆஸ்திரேலியா இறுதி விக்கெட்டை இழந்து 316 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த அணியின் தொடர் வெற்றிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா, புவணேஷ்குமார் தலா 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. இப்போட்டியில் 109 பந்துகளில் 16 பவுன்ட்ரிகளுடன் 117 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வானார்.

நேற்றைய போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்மான நிகழ்வுகள் சில..

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்றைய போட்டியில் இந்திய அணி 352 ரன்கள் குவித்தது. இதன்மூலம் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு அணியின் அதிகபட்ச ரன்களாக இது பதிவானது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 289 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது.

* 352 ரன்கள் என்பது உலகக்கோப்பையில் இந்திய அணியின் 4வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

* அதிக சதம்: ஷிகர் தவான் சதம் விளாசி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் பதிவு செய்யும் 27வது சதம் இதுவாகும். இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதம் விளாசிய அணி என்ற பெருமையை இந்தியா தட்டிச் சென்றுள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் 26 சதங்கள் விளாசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Tags : Shikhar Dhawan ,team , Shikhar Dhawan, century, World Cup, Indian team
× RELATED 2022 கத்தார் உலகக்கோப்பை கால்பந்து...