அதிபர் வேண்டுகோள் இலங்கையில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக கூடாது

கொழும்பு: ‘‘இலங்கையில் முஸ்லிம் பிரிவில் இருந்து மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க வேண்டாம்,’’ என்று இலங்கை மக்களிடம் அதிபர் மைத்திரிபால சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் தனி ஈழம் கோரி, விடுதலைப் புலிகள் அமைப்பு நீண்ட காலமாக ஆயுத போராட்டம் நடத்தி வந்தது. 2009ம் ஆண்டில் ராணுவத்துடன் நடந்த இறுதிப்போரில் இந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இந்த போரில் ஆயிரணக்கணக்கானோர் பலியாயினர். தற்போது, இந்நாட்டின் புலிகள் அமைப்பின் செயல்பாடுகள் இல்லை.

இறுதிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. யாரும் எதிர்பாராத வகையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதரவுடன், இலங்கையில் உள்ள தேசிய தவுஹீத் ஜமாத் என்ற முஸ்லிம் தீவிரவாதிகள் 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் மனித குண்டு தாக்குதலை நடத்தினர். இதில், 250 பேர் பலியாயினர். இந்த தீவிரவாதத்தை முற்றிலும் வேரறுக்க இலங்கை அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முல்லைதீவு பகுதியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை அதிபர் சிறிசேனா, மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

அவர் பேசுகையில், ‘‘நாட்டில் தற்போது அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் ஒற்றுமையாக இல்லை. பிளவுபட்டு இருக்கின்றனர். இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில்தான் அரசியல்வாதிகளின் கவனம் உள்ளது. நாட்டின் மீது இல்லை. நாம் பிளவுபட்டு இருந்தால், ஒட்டுமொத்த நாடும் வீழ்ச்சியடையும். இன்னொரு போர் உருவாகும். இந்த பிரிவினை நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும். இங்கு தமிழர்கள் சந்திக்கும் பிரச்னையை புரிந்து கொண்டுள்ளேன். அவர்களின் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். கடந்த கால நிகழ்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தீவிரவாதம் வளரவும், மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் பிறக்கவும், உருவாகவும் இடமளிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

× RELATED நீட் தேர்விலிருந்து தமிழக...