×

சென்னை கொளத்தூர் தொகுதியில் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் குடிநீர் விநியோகம்

சென்னை: கொளத்தூர் தொகுதியில் தொட்டிகள் அமைத்தும், இலவச குடங்கள் வழங்கியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடிநீர் விநியோகம் செய்தார். தமிழகத்தில் பருவ மழை பெய்யாத காரணத்தாலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் நீர்நிலைகள் வறண்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு காலி குடங்களுடன் தெருத்தெருவாக மக்கள் அலைந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் செயல்படவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அதன்படி மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துறைமுகம் பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்தும், பொதுமக்களுக்கு இலவச குடங்களை வழங்கியும் குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் நேற்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு இலவச குடங்களை வழங்கி, குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேப்பர் மில் சாலை, பெரியார் நகர், ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு இலவச குடங்கள் வழங்கப்பட்டு, தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இதையடுத்து, கொளத்தூர் தொகுதியில் மக்கள் பிரச்னை குறித்து ஆய்வு செய்தார். அப்போது கொளத்தூர், அம்பேத்கர் நகரில் கட்டிட பணியின்போது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து படுகாயமடைந்த கதிர்வேல், ஏழுமலை, அந்தோணிசாமி, அம்சவேணி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். இடிந்து விழுந்த வீட்டையும் பார்வையிட்டார். இதில், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வில்லிவாக்கம் எம்எல்ஏ ரங்கநாதன், சட்டப்பேரவை செயலாளர் கிரிராஜன், மாவட்ட துணை செயலாளர் தேவஜவகர், பகுதி செயலாளர்கள் முரளிதரன், நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : MKStalin ,district ,Chennai ,Kolathur , Chennai, Kolathur Block, People, MK Stalin, Drinking Water, Distribution
× RELATED குடிநீர் விநியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்