ரேணிகுண்டாவில் பிரதமர் மோடி பேச்சு ஆந்திரா, தமிழகத்திலும் வெற்றியை நோக்கி பயணிப்போம்: பொதுக்கூட்டத்தில் பந்தல் சரிந்ததால் பரபரப்பு

திருமலை: ‘‘ஆந்திரா, தமிழகத்தில் வெற்றியை நோக்கி பயணிப்போம்’’ என்று ரேணிகுண்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காகவும், ரேணிகுண்டாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசவும் நேற்று மாலை திருப்பதிக்கு வந்தார். அவரை ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மாநில டிஜிபி கவுதம்சவாங், மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து ரேணிகுண்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: வெங்கடேஸ்வர சுவாமி ஆசீர்வாதத்தால் மீண்டும் எனக்கு ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கிய பாரத மக்களுக்கும், வெங்கடேஸ்வர சுவாமிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ஆந்திர, தமிழ்நாடு மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.வரும் காலத்தில்  தொடர்ந்து ஆந்திர, தமிழகத்தில் வெற்றியை நோக்கி பயணிப்போம்.

தேர்தல் வெற்றி என்பது தேர்தல் வரை மட்டுமே. 365 நாட்களும் பொதுமக்களின் மனதை வெற்றி பெறவும், சேவை செய்யவும் பாஜ கட்டுப்பட்டு உள்ளது. அதிகாரத்திற்கு வருவதும் முக்கியம். அதேபோல் மக்கள் நலத்திட்ட வளர்ச்சியும் முக்கியம். அதனால்தான் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஊழலற்ற ஆட்சி நடத்தி, தற்போது மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளோம். தொடர்ந்து மக்கள் நலத்திட்டம்  செயல்படுத்தப்படும். நம்மை நம்பிய மக்களுடன் நாம் தொடர்ந்து இருக்க வேண்டும். மக்களுக்கு நாம் செய்யும் பணிகளை பொறுத்தே அவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். நம் மூத்த தலைவர் நமக்கு வழங்கிய  வழிகாட்டுதலின்படி மக்களுடன் இணைந்து இருக்க வேண்டும். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக இருக்க வேண்டும். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் சேவையில் நாம் தொடர்ந்து இருக்க வேண்டும்.

தேர்தல் முடிந்து விட்டாலும் தேர்தல் முடிவில் இருந்து சிலர் வெளியே வரமுடியாமல் உள்ளனர். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஆந்திர மாநில வளர்ச்சிக்கு எப்போதும் மத்திய அரசு துணையாக இருக்கும். ஆந்திர மக்கள் கல்வி, விவசாயம், விஞ்ஞானிகள் என திறமை நிறைந்தவர்கள். தேர்தல் நேரத்தில் வெவ்வேறு ஆலோசனையில் இருந்தவர்கள் தற்போது இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு நரேந்திர மோடி என்ன செய்வார்? எந்தமுறையில் ஆட்சி புரிவார் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு உள்ளனர்.

மக்களின் மனநிலையை வெற்றி பெறும் விதமாக வரும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில் எனக்கு கிடைத்த அனுபவத்தின்படி மக்கள் நலத்திட்டத்தை நிறைவேற்றினால் எப்போதும் அவர்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன். எனவே, 130 கோடி மக்களுக்காக அதேபோன்று ஆட்சியை நடத்தும்போது ஆசீர்வாதத்தை  எப்போதும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே மாலை பலத்த காற்று அடித்ததால் பொதுக்கூட்டத்தில் பந்தல் சரிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த தொண்டர்கள் அலறி அடித்து ஓடினர். அப்போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் மாநில அமைச்சரும் ஜனசேனா கட்சி சார்பில் மக்களவை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த ராவல கிஷோர்பாபு மோடி முன்னிலையில் பாஜவில் இணைந்தார்.

Tags : Modi ,Talks ,Andhra Pradesh ,Ranchi ,Tamilnadu , Let's travel to Ranikunda, Prime Minister Modi, Andhra Pradesh, Tamil Nadu, to victory
× RELATED டெல்லி ஐதராபாத் இல்லத்தில்...