×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன அறைகள் நிரம்பியதால் வெட்ட வெளியில் படுத்த பக்தர்கள்: பிரதமர் வருகையையொட்டி தரிசனம் ரத்து

திருமலை:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன அறைகள் நிரம்பியதால் பக்தர்கள் வெட்ட வெளியில் படுத்து தூங்கினர். இதற்கிடையே பிரதமர் வருகையையொட்டி நேற்று 8 மணி நேரம் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வார விடுமுறை நாளான நேற்று முன்தினம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை பக்தர்கள் வருகையால் திருமலை பகுதி நிரம்பி வழிந்தது.

இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பி 3 கிமீ. வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் 24 மணி நேரத்திற்கு பிறகே சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை 98 ஆயிரத்து 44 பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் அறை கிடைக்காமல் கோயிலின் எதிரே ஆங்காங்கே வெட்ட வெளியில் இரவு படுத்து தூங்கினர். இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை தேவஸ்தான அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கும் ‘சர்க்கார் சகஸ்கர கலசாபிஷேகம்’ நடந்தது. இதனால் அதிகாலை முதல் காலை 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. 9 மணிக்கு பிறகு இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தரிசனத்தின்போது வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள்  நிரம்பி லேபாக்சி சந்திப்பு வரை பக்தர்கள் நின்றுகொண்டிருந்தனர். இவர்கள் 24 மணி நேரம் காத்திருந்தும், ரூ.300 டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள், 5 மணி நேரம் காத்திருந்தும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சகஸ்கர கலசாபிஷேகம் காரணமாக திவ்ய தரிசன டிக்கெட் நள்ளிரவு 12 மணிக்கும், சர்வ தரிசன டிக்கெட் அதிகாலை 4 மணிக்கும் நிறுத்தப்பட்டது. மேலும் பிரதமர் வருகையையொட்டி மாலை 5 மணி முதல் பிரதமர் தரிசனம் முடித்து செல்லும் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. பிரதமர் வருகையால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்கள் வருகையையொட்டி 2 மலைப்பாதைகளிலும் 24 மணி நேரமும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags : Devotees ,darshan rooms ,arrival ,darshan ,Tirupathi Ezhumalayyan , Tirupathi Ezhumalayyan Temple, free darshan rooms, full, cut out, devotees
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி