×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 12வது முறையாக நடால் சாம்பியன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 12வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீமுடன் (25 வயது, 4வது ரேங்க்) நேற்று மோதிய நடப்பு சாம்பியன் நடால் (33 வயது, 2வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த டொமினிக் தீம் 7-5 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது செட்டில் அதிரடியாக விளையாடி டொமினிக்கின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த நடால் 6-1 என வென்று மீண்டும் முன்னிலை பெற்றார்.

இதைத் தொடர்ந்து 4வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதில் 0-3 மற்றும் 0-40 என பின் தங்கியிருந்த தீம் தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து அந்த கேமை கைப்பற்றி போராடினார். எனினும், அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி இளம் வீரரின் சவாலை முறியடித்த நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று 12வது முறையாக பிரெஞ்ச் ஓபன் கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 3 மணி, 1 நிமிடத்துக்கு நீடித்தது. இது நடால் வென்ற 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் 12 முறை கோப்பை வென்றுள்ள நடால்... ஆஸ்திரேலிய ஓபனில் 1 முறையும், விம்பிள்டனில் 2 முறையும், யுஎஸ் ஓபனில் 3 முறையும் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : French Open ,Natal , French Open Tennis, 12th time, Nadal, Champion
× RELATED 1000 மீனவர்கள் 40% மானியத்தில் இயந்திரம் வாங்க நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு