×

தில்லை கங்கா நகர் சாலையில் உடைந்த நடைபாதையால் தவறி விழும் பாதசாரிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பிரதான சாலையின் நடைபாதை ஆங்காங்கே உடைந்துள்ளதால், பாதசாரிகள் தவறி விழுந்து அவதிக்குள்ளாகின்றனர். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பிரதான சாலை போக்குவரத்து மிகுந்த தடமாக உள்ளது. இந்த சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைத்து, அதன்மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினசரி ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த மழைநீர் கால்வாயில் ஆங்காங்கே உள்ள மேன்ஹோல் பகுதியில் முறையாக கான்கிரீட் அமைக்காததால், உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அந்த வழியாக நடந்து செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில்  இந்த  பள்ளங்கள் சரிவர தெரியாததால், பாதசாரிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த நடைபாதையில் ஆங்காங்கே மேன்ஹோல் உள்ள பகுதிகளில் கான்கிரீட் உள்வாங்கி, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், பலர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த நடைபாதையை ஆக்கிரமித்து இரவுநேர கடைகள் புற்றீசல் போல் பெருகி வருகிறது. இந்த கடைகளை நடத்துபவர்கள் பகலில் தடவாட பொருட்களை அங்கேயே மூடிவிட்டு  செல்கின்றனர்.

இதனால், காலை, மாலை நேரங்களில் பாதசாரிகள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் மாநகராட்சி, காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, உடைந்துபோன மழைநீர் கால்வாய் மேன்ஹோல்களை சீரமைத்து, நடைபாதை கடைகளை அகற்றி, முறையாக பராமரிக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : Pedestrians ,Thillai Ganga Nagar Road , Thillai Ganga Nagar Road, broken pedestrian, falling down, pedestrians
× RELATED திருவள்ளூர் ஜெ.என்.சாலை நடைபாதை...