சாலை விபத்துகளில் மாணவி உள்பட 5 பேர் பலி

சென்னை: சின்ன மாத்தூர் அருளானந்தம் நகரை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (23). அதே பகுதியை சேர்ந்தவர் சுவர்ணமணி (20). இவர்கள், மாதவரம் 200 அடி சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தனர். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்ற இருவரும், சாப்பிடுவதற்கு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். எம்ஜிஆர் நகர் அருகே சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த லாரி இவர்கள் பைக் மீது மோதியது. இதில் ஜான் ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். சுவர்ணமணி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

* கொடுங்கையூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாண்டில்யன். இவரது மகள் அட்சயா (7). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு மகளுடன் கடைக்கு சென்ற சாண்டில்யன், விளையாட்டு பொருட்கள் வாங்கிக்கொண்டு, பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். மூலக்கடை சாலை சந்திப்பு அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் அட்சயாவும், சாண்டில்யனும் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். படுகாயமடைந்த அட்சயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.

* அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டை பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் அம்புஜம் (70). இவர் நேற்றுமுன்தினம் அம்பத்தூர் தொழிற்பேட்டை, சிடிஎச் சாலையை கடக்க முயன்றபோது, மினி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லாரி டிரைவரை தேடுகின்றனர்.

* புதுவண்ணாரப்பேட்டை தண்டல முத்து தெருவை சேர்ந்த முகமது சாதிக் (62) என்பவர், வீட்டின் அருகே பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் சாவு:
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கமலா (60) என்பவர் நேற்று முன்தினம் இரவு மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதேபோல், ஆலந்தூர் அப்பாவு தெருவை சேர்ந்த பாஸ்கர் (50) என்பவர், நேற்று முன்தினம் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலே பலியானார்.

Tags : road accidents , Road accident, student, people, kills
× RELATED பல்லாவரம் அருகே இரவு நேரங்களில்...