×

பொன்னேரி அருகே 4 வழிச்சாலைக்கு மக்கள் எதிர்ப்பு: போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை

சென்னை: பொன்னேரி அருகே 4 வழிச் சாலைக்காக வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் இருந்து பழவேற்காடு வரை சுமார் 22 கி.மீ தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணி ஏலியம்பேடு வரை முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த 4 வழிச்சாலை பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் மற்றும் பெரியகாவனம் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நெடுஞ்சாலைத் துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சின்னக்காவனம் மற்றும் பெரியகாவனம் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காலம், காலமாக குடியிருந்து வரும் தாங்கள் வீடுகளுக்கு மத்தியில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுவார்கள் என பெண்கள் கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்தனர். நெடுஞ்சாலைத் துறையினர் இத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். குடியிருப்புகளுக்கு பாதிப்பில்லாத மாற்றுப்பாதையை தேர்வு செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 4 வழிச்சாலை திட்டத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். தங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தங்களது போராட்டம் பல்வேறு வடிவங்களில் தீவிரமடையும் எனவும் சின்னக்காவனம் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pavilions ,Ponnari ,struggle , Ponneri, 4 pavilions, people, protest, struggle
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!