×

அம்பத்தூர் முதல் திருநின்றவூர் வரை மின் விளக்கு இல்லாததால் இருளில் மூழ்கும் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

ஆவடி: சென்னையில் இருந்து திருப்பதிக்கு அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் பகுதி வழியாக சிடிஎச் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை அமைந்துள்ள திருமுல்லைவாயல், ஆவடி பகுதிகளில் சாலையின் மைய தடுப்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த விளக்குகளும் முழுமையாக அமைக்கப்படாமல் சில இடங்களில் விடுப்பட்டு உள்ளன.
குறிப்பாக, அம்பத்தூர், கிருஷ்ணபுரம் முதல் திருமுல்லைவாயல் பழைய போலீஸ் நிலையம் வரை சாலை நடுவில் மின் விளக்குகள் இல்லை. மேலும், திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகர் முதல் ஆவடி, இமாகுலேட் பள்ளி வரையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதிலும் சிடிஎச் சாலையில் சில இடங்களில் மையத்தடுப்பில் விளக்குகள் அமைக்கவில்லை. இதோடு மட்டுமல்லாமல் ஆவடி, செக்போஸ்ட் முதல் திருநின்றவூர் வரை சாலையின் மையத்தடுப்பில் மின் விளக்குகள் பல ஆண்டாக அமைக்கப்படாமலேயே உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர்-கிருஷ்ணாபுரம், பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர் வரை சாலையில் ஒரு பக்கம் மட்டும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த விளக்குகளின் வெளிச்சம் சிடிஎச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால் சிடிஎச் சாலையில் இரவில் செல்லும் வாகனங்கள் வெளிச்சம் குறைவால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. மேலும், இச்சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் பலர் உயிர் இழந்து வருகின்றனர். சாலை ஓரங்களில் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி பலர் பலியாகின்றனர். ஆவடி பகுதியில் இந்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான பல நிறுவனங்களும், 4 சிறப்பு காவல் படைகளும் உள்ளன.

இங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் ஆவடி, அம்பத்தூர் சுற்று வட்டாரத்திலேயே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல சிடிஎச் சாலையை பயன்படுத்தியே செல்கின்றனர். இந்த சாலையில், பல ஆண்டாக மின் விளக்குகள் முறையாக அமைக்கப்படாமலேயே கிடக்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பாதுகாப்பு துறை தொழிலாளர்கள், பல தரப்பு மக்களும் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே  அம்பத்தூர் முதல் திருநின்றவூர் வரையிலான சி.டி.எச் சாலையில் மின் விளக்குகளை அமைக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Ambattur ,motorists ,drowning ,Thirunavilavur , Ambattur, Thiruninavoor, electric light, drown in darkness. Road
× RELATED அம்பத்தூர், பொன்னேரி பகுதிகளில் விடிய...