×

ஐந்தாம் கட்ட அகழாய்வு கீழடியில் இன்று துவக்கம்

திருப்புவனம்: கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி இன்று தொடங்க உள்ள நிலையில் இடம் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் சங்ககால தமிழர்களின் நகர நாகரிகம் குறித்து, இந்திய தொல்லியல்துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில், கடந்த 2015ல் அகழ்வாராய்ச்சி தொடங்கியது. தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில், இரண்டு கட்ட அகழாய்வு நடைபெற்றது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் 2 தொல்லியலாளர், 4 அகழாய்வாளர்கள் அடங்கிய குழு, கடந்தாண்டு ஏப். 18 முதல் செப். 30ம் தேதி வரை 3 மற்றும் 4ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடத்தினர். செப். 30ம் தேதியோடு 4ம் கட்ட அகழாய்வு முடிந்தது. இதில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கிடைத்தன.

ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 5ம் கட்டப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தல், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய காரணங்களால் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஜூன் முதல் வாரம் அகழாய்வு பணி தொடங்கும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில்,  கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி இன்று தொடங்க உள்ளதாக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags : phase , Fifth phase of excavation, underneath
× RELATED வேட்பாளர்களுக்கான 3ம் கட்ட ஒத்திசைவு கூட்டம்