×

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என போர்க்கொடி என் கருத்தை ஆதரிப்பவர்கள் அதிகம் முடிவில் பின்வாங்கப்போவது இல்லை: ராஜன்செல்லப்பா உறுதி

மதுரை: அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்று போர்க்கொடி தூக்கியுள்ள மதுரை எம்எல்ஏ ராஜன்செல்லப்பாவுடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச்செயலாளர்கள் ஏராளமானோர் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். ‘‘என் கருத்தை ஆதரிப்போர் அதிகம். எனது முடிவில் பின்வாங்க மாட்டேன், விரைவில் நல்ல முடிவு ஏற்படும்’ என்று ராஜன்செல்லப்பா கூறினார். மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மதுரை புறநகர் மாவட்டச்செயலாளரும் எம்எல்ஏவுமான ராஜன்செல்லப்பா கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, ‘அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது. ஒற்றை தலைமை தேவை’ என இரு நாட்களுக்கு முன் அளித்த பேட்டி கட்சியில் புயலை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் ராஜன்செல்லப்பா நேற்று கூறுகையில், ‘‘ஏற்கனவே பல மாவட்டச்செயலாளர்கள், எம்எல்ஏக்களை சந்தித்தும், தொடர்பு கொண்டும் கலந்துரையாடிய பிறகு அனைவரின் எண்ண ஓட்டத்தை அறிந்து தான் கட்சிக்கு இரட்டை தலைமை கூடாது. ஒற்றை தலைமை தேவை என்று சொன்னேன். இதன் பிறகு நிறைய எம்எல்ஏ, மாவட்டச்செயலாளர்கள் மட்டுமின்றி சில அமைச்சர்களும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் யார், யார் என்ற பட்டியலே உள்ளது. அதை இப்போது சொல்லவிரும்பவில்லை. என் கருத்துக்கு ‘நெகட்டிவ்’ கருத்து யாரிடமும் இல்லை. ஆதரவை பகிரங்கமாக சொல்லவில்லை. அவ்வளவு தான். எம்எல்ஏ ராமச்சந்திரனை போன்று மேலும் பலரும் உரிய நேரத்தில் வெளிப்படையாக சொல்ல தயாராக இருக்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள், என் கருத்தை ஆதரிப்போர் அதிகம். விரைவில் ஒற்றை தலைமைக்கான முடிவு நிச்சயம் ஏற்படும்’’ என்றார். ‘கட்சித் தலைமையில் இருந்து சமரச தூது வந்ததா என்று கேட்டதற்கு, ‘‘இதில் சமரசத்திற்கு என்ன இருக்கிறது. கட்சியின் எதிர்காலம் கருதி வெளியிட்டுள்ள முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன்’’ என்று திட்டவட்டமாக பதிலளித்தார்.

Tags : supporters ,battlefield ,Rajan Joseph , AIADMK, single head, RajanCallappa
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...