×

குன்னம் எம்.எல்.ஏ.வின் வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு: சுயநலமற்ற ஒற்றை தலைமை வேண்டும்

திருச்சி: அதிமுகவில் சுயநலமற்ற ஒற்றை தலைமை தேவை’ என மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பாவை தொடர்ந்து, குன்னம் எம்.எல்.ஏ.வும் விருப்பம் தெரிவித்து வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டு உள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்தநிலையில், மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா நேற்றுமுன்தினம், இ.பி.எஸ், ஓ.பி.எஸ். இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். கட்சியை கட்டுப்பாட்டுடன் நடத்த ஒற்றை  தலைமை வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்நிலையில், இன்னும் ஒரு எம்.எல்.ஏ. கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமசந்திரன், ராஜன் செல்லப்பா கருத்தை ஆதரித்து வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து மதுரை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா கூறிய கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அவர் சொன்னதுபோல ஒற்றை தலைமை வலிமையான, சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கழகமே குடும்பமாக நினைத்து உருவாக்கி காத்திட்ட இந்த அதிமுகவை யார் தனது குடும்பத்துக்காக மிரட்டினாலும் சரி, பிளவு படுத்த முயன்றாலும் சரி அதிமுகவில் மீண்டும் ஒரு சசிகலாவாகத்தான் அதிமுக தொண்டர்கள் நினைப்பார்கள். இதை தலைவர்கள் புரிந்து கொண்டு கழகத்துக்காக அர்ப்பணித்து வாழ வேண்டும். அவர் குடும்பத்துக்காக கழகத்தை வளைக்க நினைப்பது எங்களுக்கெல்லாம் (எம்.எல்.ஏ.க்கள்), அதிமுக தொண்டர்களுக்கெல்லாம் வேதனை அளிக்கிறது என்பதை தலைமைக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ராமசந்திரன் பேசி உள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : MLA , Kunnam MLA, Watts Up Video, Single Lead
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்