×

ரியல் எஸ்டேட் அதிபர்கள் ‘ஆசியுடன்’ 5 ஆண்டில் 5000 ஏக்கர் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிய அவலம்

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு வசதியாக விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்ற வேகமாக அனுமதி அளிக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 5,000 ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் சாகுபடி குறைந்து அரிசி, பருப்பு, காய்கறி விலை உயர்வதுடன் எதிர்காலத்தில் காட்சி ெபாருளாக மட்டுமே ஏழைகள் பார்க்கும் சூழல் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் கொடிக்கட்டி பறந்து வருகிறது. இதற்காக நடந்த கொலைகளும் அதிகம். பயிர், தோட்டங்கள் இருந்த பூமி இன்று அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்த அதே நிலையில் விவசாயம் அதலபாதாளத்துக்கு சென்றது. இந்த மாவட்டங்களில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலுக்காக, இந்த விவசாய நிலங்களை, வீட்டு மனைகளாக பிரிக்கும் திட்டங்களுக்கு வேகமாக அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அனுமதி பெற்றுத் தருவதற்கு என்றே ஏகப்பட்ட புரோக்கர்கள் செயல்பட்டு வருகின்றனர். பணம் கைக்கு மாறியவுடன் விவசாய நிலத்தை வகை மாற்றி வீட்டு மனைகளாக மாற்றித் தருகின்றனர். இதற்காக அதிகாரிகளிடம் லட்சக்கணக்கில் பணம் புரள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 5,000 ஏக்கர் நன்செய் நிலங்கள், புன்செய் நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு உள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்  இதுபோன்ற வீட்டுமனை திட்டங்களுக்காக நில வகை மாற்றத்திற்கான விண்ணப்பத்தை பெறுவது அதன் மேல் துரிதமாக நடவடிக்கை எடுக்க அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படாத தனி பிரிவே செயல்படுவதாகவும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் இந்த பணியில் ஆர்வம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ரியல் எஸ்டேட் அதிபர்களின் தனிப்பட்ட ‘கவனிப்பே’’ காரணம் என்று விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், அம்பத்தூர், மணலி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், செய்யூர், மதுராந்தகம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வல்லக்கோட்டை, பெரும்புதூர், மாகறல், உத்திரமேரூர் செங்கல்பட்டு சுற்றி உள்ள விவசாய கிராமங்களில் வீட்டுமனை பிரிவுகள் அதிகமாக உள்ளன. இவற்றில் பல நன்செய் நிலங்களாக இருந்தவை. பொதுவாக புன்செய் நிலங்கள் மட்டுமே வீட்டு மனைகளாக பிரிக்க அனுமதி உண்டு. நன்செய் நிலங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பயிர் செய்யாமல் விடப்பட்டால் வருவாய் துறை அதிகாரிகள் மூலம் உறுதி செய்யப்பட்ட பின் ஆட்சேபம் இல்லாத பட்சத்தில் புன்செய் நிலமாக மாற்றம் செய்யப்படும். அதன்பின், அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரிக்கலாம். தற்போது ரியல் எஸ்டேட் அதிபர்கள், நன்செய் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து ஓரிரு ஆண்டுகளில் அதை புன்செய் நிலமாக மாற்றிவிடுகின்றனர். அதன்பின், உரிய அனுமதி பெற்று வீட்டு மனைகளாக பிரித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

விஷயம் தெரிந்தே ஏக்கருக்கு, சில லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, வருவாய் துறை அதிகாரிகள் நில வகை மாற்றம் செய்கின்றனர். இதனால், விவசாய நிலங்கள் பரப்பளவு வேகமாக குறைந்து வருகிறது’’’ என்றனர். இதை இப்படியே விற்றால் இந்த மாவட்டங்களில் வசிக்கும் ஏழைகள் அரிசி, பருப்பு, காய்கறிகளை கண்களால் பார்ப்பதோடு சரி. வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு வசதி இருக்குமா என்பது எதிர்காலத்தில் கேள்விக்குறியாகவே இருக்கும் என்றனர்.

புள்ளி விவரத்தை மாற்றி மோசடி


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஒருபுறம் விவசாய நிலங்கள், புன்செய் நிலங்களாக மாற்றப்பட்டு வரும் நிலையில் புள்ளியியல் துறையில் அதுகுறித்து பதிவேடுகள் பராமரிக்கப்படுவது இல்லை.  இதனால், விவசாய நிலம் குறையாதது போல புள்ளி விவரங்களை அரசுக்கு மாற்றி கொடுத்து  ஏமாற்றும் வேலையிலும், மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. எனவே நிலம் மற்றும் நிர்வாக துறை உயர் அதிகாரிகள் இந்த மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் புன்செய் நிலமாக மாற்றப்பட்டுள்ள விவசாய நிலங்கள் குறித்து முறையான ஆய்வு நடத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வரும். தற்போதாவது இந்த விஷயத்தில் சுதாரிக்காவிட்டால் விவசாய நிலங்கள் வேகமாக அழிவதை யாராலும் தடுக்க முடியாது’’ என்றனர்.

Tags : land ,Real Estate Principals ,Aishwarya , Real Estate Principals, Farmland, Residential Land
× RELATED அரசு நிலத்தில் குடிசை அமைப்பதில் இரு தரப்பினர் திடீர் மோதல்