மத்திய அமைச்சர் தகவல்: 2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை

மும்பை: முதல் முறையாக இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு 2 லட்சம் பேர் செல்ல இருப்பதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு ‘ஹஜ்’ யாத்திரை செல்லும் இந்தியர்களுக்கான எண்ணிக்கையை 2 லட்சமாக அதிகரித்து சவுதி அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. இதுதொடர்பாக, மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில் நேற்று நடந்த தனியார் சுற்றுலா நிறுவன பிரதிநிதிகள் கூட்டத்தில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பங்கேற்று பேசியதாவது: இந்த ஆண்டு முதல் முறையாக 2 லட்சம் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். இந்தியர்களுக்கான எண்ணிக்கையை அதிகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களில் 1.40 லட்சம் பேர் ஹஜ் கமிட்டி மூலமாகவும், 60 ஆயிரம் பேர் தனியார் சுற்றுலா நிறுவனங்களின் உதவியுடனும் செல்ல உள்ளனர்.

இவர்களுக்காக நாட்டின் 21 விமான நிலையங்களில் இருந்து 500 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஹஜ் பயணிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மக்கா மற்றும் மதீனாவில் ஏற்பாடு செய்யப்படும். இம்முறை 2,340 பெண்கள், ஆண்களின் துணையின்றி தனியாக பயணிக்க உள்ளனர். அதே போல, 2 லட்சம் யாத்திரீகர்களில் 48 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். ஹஜ் மானியத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

× RELATED தீர்த்தமலையில் பாமக பொதுக்குழு கூட்டம்