×

விமானப்படைக்கு வலு சேர்க்க சுகோய் விமானத்தில் பிரமோஸ் ஏவுகணை

புதுடெல்லி: பாலகோட் வான்வழி தாக்குதல் எதிரொலியாக, இந்திய விமானப்படையை மேலும் வலுவாக்க, 40 சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை பொருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்தன. அவற்றை விரட்டும் முயற்சியில் இந்தியா தனது மிக்-21 ரக போர் விமானம் ஒன்றை இழந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படையை வலுப்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 40 சுகோய் போர் விமானங்களில் உலகின் அதிவேகமான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை பொருத்தும் பணியை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

இப்பணியை கடந்த 2017ம் ஆண்டு எச்ஏஎல்-பிரமோஸ் விண்வெளி நிறுவனம் இணைந்து தொடங்கின. ஆனால், மந்தகதியில் நடந்து வரும் இப்பணியை விரைவுபடுத்தி, 2020 டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக இணைப்பு பணியில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. 40 சுகோய் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன. ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை 2.5 டன் எடை கொண்டது. இது, 290 கிமீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தகர்க்கும். தற்போது இந்த இலக்கை 400 கிமீ வரை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த ரக ஏவுகணையை  பொருத்துவதற்கு ஏதுவாக சுகோய் விமானத்தில் சில மாற்றங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

சுகோய் விமானத்தில் பொருத்தப்படும் மிக அதிக எடை கொண்ட ஏவுகணை பிரமோஸ் ஆகும். ஏற்கனவே கடந்த 2017ல் இந்த ஏவுகணையை சுகோய் விமானத்தில் பொருத்தி இலக்கை தாக்கும் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. சுகோய்-பிரமோஸ் இணைப்பு பணி நிறைவடையும் பட்சத்தில், நீண்ட தூர கடல் வழி மற்றும் தரை வழி இலக்கை தகர்க்கும் வல்லமையை இந்திய விமானப்படை பெறும். அதோடு, இந்திய விமானப்படையில் விரைவில் இடம் பெற உள்ள ரபேல் போர் விமானத்துடன் எஸ்-400 ரக ஏவுகணையும், சுகோயுடன் பிரமோசும் இணையும்பட்சத்தில் பாகிஸ்தான் விமானப்படையை காட்டிலும் இந்திய விமானப்படை பன்மடங்கு பலம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sukhoi ,Air Force , Air Force, Sukoy, Parmos Missile
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...