×

துறையூரில் இருந்து ஈரோட்டுக்கு விற்பனைக்காக கடத்தி வந்த 5300 இலவச வேட்டி,சேலை பறிமுதல்

ஈரோடு: திருச்சி துறையூரில் இருந்து 5,300 இலவச வேட்டி சேலைகளை ஈரோட்டிற்கு விற்பனைக்கு கடத்தி வந்த மினி சரக்கு லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி-சேலை மக்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இலவச வேட்டி சேலைகளை விற்பனைக்காக ஈரோட்டுக்கு கடத்திக் கொண்டு வருவதாக ஈரோடு வருவாய் துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோடு ரயில்வே கேட் அருகே ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி தலைமையில், நில வருவாய் ஆய்வாளர் ரகு பிரசாத் ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் 2019ல் வழங்கப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் மூட்டை, மூட்டையாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மினி சரக்கு லாரியை பறிமுதல் செய்து, ஈரோடு தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். மேலும், லாரியை ஓட்டி வந்த டிரைவர் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பரிசல் துறை ரோட்டை சேர்ந்த மூர்த்தி (36), கிளினர் முசிறி வெள்ளூர் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (34), வாகனத்தின் உரிமையாளர் முசிறி அட்டாரப்பட்டி அம்மன் நகரை சேர்ந்த வைரமுத்து (48) ஆகிய 3 பேரிடமும்  அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் இருந்து இலவச வேட்டி சேலைகள் கொண்டு வரப்பட்டதும், மூட்டைக்கு 100 எண்ணிக்கையிலான வேட்டி, சேலைகள் 53 மூட்டைகளில் 5300 வேட்டி, சேலைகள் இருந்ததும், அவற்றை ஈரோட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது.ஆனால், இலவச வேட்டி, சேலைகளை விற்பனைக்கு அனுப்பியது யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `3 பேரிடம் விசாரணை நடத்தியதில், துணிக்கடைகளுக்கும், பழைய துணிகள் விற்பனை செய்யும் கடைகளிலும் அவர்கள் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது ’’ என்றனர்.

Tags : Erode, sale, free dump, sari
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...