×

குடிநீர் தட்டுப்பாடு, வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் சேலத்தில் ஆலோசனை

சேலம்: சேலத்தில் குடிநீர் தட்டுப்பாடு, வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்திற்கு கடந்த 6ம்தேதி இரவு வந்தார். தொடர்ந்து 7 மற்றும் 8ம் தேதிகளில் அரசு விழாக்களில் பங்கேற்ற அவர், நேற்று காலை தனது வீட்டில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில், மாற்றுத்திறனாளிகள் உதவிகள் கோரி மனுக்களை கொடுத்தனர். பின்னர், அஸ்தம்பட்டியில் உள்ள சுற்றுலா பயணியர் மாளிகையில் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில், கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி கமிஷனர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வேளாண் துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் அரசு திட்ட பணிகள் எவ்வாறு நடந்து வருகிறது என்பதை கேட்டறிந்து, அதனை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து, மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், அதை சரிசெய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சர்ச்சையை ஏற்படுத்திய கட்சி நிர்வாகிகள் கூட்டம்

அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தை முடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாநகர் மற்றும் புறநகர் கட்சி நிர்வாகிகளை, அறைக்குள் வரவழைத்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு அதிகாரிகள், கட்சியில் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளை அழைத்து, உள்ளே அனுப்பி வைத்தனர். இதில், எம்எல்ஏக்கள், மாநகர் மாவட்ட நிர்வாகிகள், புறநகர் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். அரசு அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனையை முதல்வர் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், சிறிது நேரத்தில் இந்த ஆலோசனை கூட்டத்தை அவர் முடித்துக் கொண்டார். பின்னர், வெளியே வந்த முதல்வர் முன்னிலையில், சேலம் மாநகராட்சி 59வது வார்டு அமமுக நிர்வாகி பலராமன் தலைமையில் 50 பேர், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

Tags : Chief Minister , Drinking water shortage, development work, principal, counseling
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...