×

விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்: இளவரசனை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்?

சென்னை: இளவரசனை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார் என்று விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை, அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என இருமுறை நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்விலும், காவல்துறை விசாரணையிலும் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இளவரசனின் மரணத்தில் அரசியல் லாபம் தேடத் துடித்த பல்வேறு அரசியல் கட்சிகள், மனசாட்சியை மரணிக்கச் செய்து விட்டு, இளவரசன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதிவிசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் நெருக்கடி கொடுத்தனர். அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு ஆணையம் தான் விரிவான விசாரணைக்குப் பிறகு தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை. மதுபோதையில் தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கைத் தாக்கல் செய்திருக்கிறது.
இளவரசன் கொல்லப்படவில்லை தற்கொலை தான் செய்து கொண்டார் என நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் பாமக மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள் அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்களா?

இளவரசனையும், அவரது மரணத்தையும் வைத்து ஆதாயம் தேட முயன்றவர்கள், மனசாட்சியுடன் செயல்பட்டு, அவருக்கு கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்திருந்தால், தற்கொலையை தடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் தான் இளவரசனின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும். இளவரசன் கொல்லப்படவில்லை தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவருக்கு துணையாக இருப்பதைப் போல நடித்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார் என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேபோல், அரசியல் கட்சிகளும் ஓட்டுக்காக உண்மையை மறைத்து ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்துவதை கைவிட்டு நேர்மையான அரசியல் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ramadoss ,suicide ,prince , The trial, Ramadoss, suicide
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...