×

15 ஆண்டுகளுக்கு பிறகாவது விழிக்குமா அரசு சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் புழல் ஏரி நீரில்லாமல் வறண்டது

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை போக்கி வந்த புழல் ஏரி முற்றிலும் வறண்டுவிட்டது. இதை பயன்படுத்தி நீர்வரத்து கால்வாய், தூர்வாருதல், பராமரிப்பு பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக அரசு செய்து முடிக்குமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கும் நிலையில், சென்னை மக்களின் தாகத்தை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இதேபோல் மற்றொரு ஏரியான சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. இந்த 2 ஏரிகளும், குறித்த நேரத்தில் பருவ மழை பெய்யாதது மற்றும் கோடை வெயிலினால் வறண்டு போயிருக்கிறது.

இந்த சூழலில்தான் ஏரிகளின் பராமரிப்பை வடகிழக்கு பருவத்துக்கு முன்னதாக செய்து முடித்துவிட முடியும். குறிப்பாக தூர்வாருதல், பராமரிப்பு, நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை செய்ய முடியும். ஆனால் அதற்கான திட்டங்கள் எதுவும் இல்லாமல் பொதுப்பணித்துறை தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது.

அதே சமயம் சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று மற்ற துறையினர் தள்ளாடி வருகின்றனர். குறிப்பாக புழல் ஏரியில் முழு கொள்ளளவில் தண்ணீர் நிரம்பியபோதும், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு 120 கன அடி நீர் அனுப்பப்பட்டது. பின்னர் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து, நேற்று முன்தினம் வெறும் 5 கன அடி நீர் சென்னை நகர குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட்டது. அந்த தண்ணீரும் சேறும் சகதியுமாக இருந்ததால் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதேபோல் கடந்த 2004-ம் ஆண்டு புழலேரி வறண்டு போனது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பொதுப்பணித் துறை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், தற்போது மீஞ்சூர், காட்டுப்பள்ளி பகுதியில் கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையத்தில் இருந்து விநாடிக்கு 40 மில்லி லிட்டர் குடிநீர், திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி ஏரியில் இருந்து குறைந்த அளவு தண்ணீரும் வெள்ளியூர், கீழானூர், தாமரைப்பாக்கம், மாகரல், பூச்சிஅத்திப்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகளில் பணம் கொடுத்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, பைப்லைன் மூலம் புழல் ஏரி வளாகத்தில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.


இங்கு அந்த தண்ணீரை சுத்தம் செய்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு வழங்கப்படுகிறது. வரும் மாதங்களில் பருவமழை பொய்த்து போனால், சென்னை நகர மக்களின் தேவைக்கு இந்த தண்ணீரைக்கூட எடுத்து அனுப்ப முடியாத சூழல் உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், புழல் ஏரியில் தூர்வாருவதற்கு போதிய நிதி ஒதுக்கியும் இன்னும் அப்பணிகள் துவங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சோழவரம் ஏரியில் தூர்வாரும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றாலும், குறிப்பிட்ட
இடங்களில் மண்களை எடுத்து வருவதால், அங்கு ராட்சத பள்ளம் உருவாகும் நிலை உள்ளது. அங்கு மழை பெய்தால்கூட பள்ளங்களில் மட்டும் தண்ணீர் நிரம்பும். ஆனால், மதகு திறந்துவிடப்படும் இடத்துக்கு தண்ணீர் வருவது காலதாமதமாகும். எனவே, சோழவரம் ஏரியில் பரவலாகவும் சீரான முறையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Government of Tamil Nadu ,lagoon , Chennai, Pooma Lake
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...