×

ஒற்றை தலைமை கேட்டு 2 எம்எல்ஏக்கள் போர்க்கொடி எதிரொலி: நாளை மறுநாள் அதிமுக அவசர கூட்டம்

சென்னை: ஒற்றை தலைமை கேட்டு 2 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து அதிமுகவின் உட்கட்சி பூசல் பூதாகரமாகி உள்ளது. இதை தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் 12ம் தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது. இதில் பங்கேற்க அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாகவும் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அதன்பிறகு, சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு இபிஎஸ் தலைமையிலான அணியாக மாறியது. அதன்பிறகு கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சி நடந்தது. அதன்பேரில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி ஒன்றாக இணைந்தது. இதில், ஓபிஎஸ்சிற்கு துணை முதல்வர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி தரப்பட்டது. ஆனால், அவர்களது ஆதரவாளர்களுக்கு பெரிதாக எந்த பதவியும் தரவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்த பிறகும் கட்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. இதனால், 2 பேரும் இணைந்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனி அணியாகத்தான் செயல்பட்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் மக்களவை தேர்தலும் 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடந்தது. இதில், அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார். 22 சட்டசபை தொகுதிகளில் 9 தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்னை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டு பாஜக மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், இபிஎஸ் தரப்போ வைத்திலிங்கத்திற்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியது. இதனால், அதிமுகவில் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததற்கு இபிஎஸ் தான் காரணம் என்று ஓ.பன்னீர் செல்வம் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே மீண்டும் பிரச்னை தலைதூக்கியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால், வெற்றி பெற்ற 9 எம்எல்ஏக்களை அவர் அழைத்து செல்லவில்லை. இது, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பத்திரிகையாளர்களை சந்தித்து நேற்று முன்தினம் பேசினார்.  அதிமுகவில் தலைமை சரியில்லை. பொதுக்குழுவை கூட்டி கட்சிக்கு ஒரே தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். மேலும், மக்களவை, சட்டசபை இடைத்தேர்தல் முடிந்த பிறகு தேனியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமார் மட்டும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார்.

ஆனால், ஆட்சியை காப்பாற்றிய 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு இதுவரை மரியாதை செலுத்தவில்லை. அந்த 9 பேரை ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் சக்தி எது. இதன் பின்னணி என்ன என்ற நெருடல்களால் அதிமுக நிலை தடுமாறி வீழ்ந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. எனவே தான் பொதுக்குழுவை உடனே கூட்டி அவசர ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.இதை தொடர்ந்து ராஜன் செல்லப்பாவின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தங்கள் குடும்பத்தை ஒதுக்கி  கழகமே குடும்பமாக நினைத்து உருவாக்கி காத்திட்ட இந்த அதிமுகவை யார் குடும்பத்துக்காக மிரட்டினாலும் சரி, பிளவுபடுத்த முயன்றாலும் சரி அவர்களையும் சசிகலாவாகத்தான் அதிமுக தொண்டர்கள் நினைப்பார்கள். குடும்பத்துக்காக கழகத்தை வளைக்க நினைப்பது அதிமுக தொண்டர்களுக்கு எல்லாம் வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் அவர் மறைமுகமாக ஓபிஎஸ்சை சாடுகிறார் என்று கட்சியினர் கூறி வருகின்றனர். தனது மகனுக்காக எம்பி சீட் வாங்கி கொடுத்து, செலவு செய்து வெற்றி பெற வைத்தது மட்டுமின்றி அவருக்கு மத்திய அமைச்சர் பதவி பெற முயற்சி செய்தது எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து ஓரங்கட்ட முயற்சிகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பிலும் கட்சியினரிடம் மறைமுகமாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 12ம் தேதி (நாளை மறுநாள்) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தலைமை கழக நிர்வாகிகள்,  அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள், எம்.பி,  எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் உட்கட்சி பிரச்னை விவகாரம் தொடர்பாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும்  தெரிகிறது.

தற்போது அதிமுகவில் இரட்டை தலைமைக்கு தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இருப்பினும் பொதுக்குழுவில் ஓபிஎஸ்சை ஓரங்கட்டி விட்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்வு செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக மீண்டும் இரண்டாக உடையும் சூழல் உருவாகியுள்ளது. ஓபிஎஸ்சிற்கு பிரதமர் மோடி, அமித்ஷாவின் முழுமையான ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் எடப்பாடிக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டால் மீண்டும் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை மட்டுமின்றி பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Emergency emergency meeting , Single head, battlefield AIADMK
× RELATED 108 அவசர ஊர்தி தொமுச கூட்டம்