×

நாடு முழுவதும் சென்று மக்களின் பிரச்சனைகளை அறிய பாரத் யாத்திரை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு

டெல்லி: பாரத் யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் சென்று மக்களின் பிரச்சனைகளை அறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த காங்கிரஸ் கட்சி, 19 சதவீத வாக்குகளுடன் வெறும் 44 இடங்களில்தான்  வெற்றி பெற்றது. தற்போது நடந்து முடிந்த 17வது நாடாளுமன்ற தேர்தலில் 8 இடங்கள் கூடுதலாக பெற்று 52 இடங்களை பெற்றிருக்கிறது. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை மத்தியமைச்சர் ஸ்மிதி ராணி தோற்கடித்தார்.

ஆனால்,கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19 மக்களவைத் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தான் வெற்றிபெற்ற வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று முன்தினம் கேரளா சென்றார். தொடர்ந்து அவர் காளிகாவு, எடவன்னா என வயநாடு தொகுதிக்கு உள்பட பகுதிகளில் வாகன பேரணி நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நேற்று 2வது நாளாக அவர் கல்பெட்டாவில் உள்ள வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி அலுவலகத்தில் 10 மணியளவில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று கொண்டார். ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த சிலர் இலவச நிலம் கேட்டு போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். பின்னர் ராகுல்காந்தி அங்கிருந்து கல்பெட்டா பஸ் நிலையம் வரை வாகன பேரணி நடத்தினார். கம்பளக்காடு பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: வயநாடு தொகுதி மட்டுமல்லாமல் கேரளாவின் பிரதிநிதியாக நான் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் செயல்படுவேன். என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நான் என்றும் நன்றி கடன்பட்டுள்ளேன். பாஜவுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும். அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்திதான் மோடி 2வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார். மக்களிடையே வெறுப்பையும், பகை உணர்வையும் வளர்த்து, விஷத்தை பரப்பி வருகிறார். பாஜவுக்கு கிடைத்துள்ளது தற்காலிக வெற்றி மட்டுமே. காங்கிரஸ் தனது பாரம்பரியத்தை பயன்படுத்தி பாஜவை எதிர்கொள்ளும்.இவ்வாறு அவர் பேசினார். பின்னர் கோழிக்கோட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

இந்நிலையில் தொடர்ந்து 2-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் அதன் காரணம் குறித்து தெரிய ராகுல்காந்தி முடிவு செய்தார். இதனையடுத்து பாரத் யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் சென்று மக்களின் பிரச்சனைகளை அறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.


Tags : Rahul Gandhi ,country ,Bharat Yatra: Congress , Country, Problem, Bharat Pilgrim, Congress, Rahul Gandhi
× RELATED தருண் கோகாய் எனது குருநாதர்: ராகுல் காந்தி உருக்கம்