×

நான்கு வழிச்சாலையில் விளக்கும் இல்லை... சிக்னலும் இல்லை: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பரங்குன்றம்: நான்கு வழிச்சாலையில் ஹைமாஸ் விளக்கும், சிக்னலும் இல்லாததால் தினம் விபத்தில் பலர் சிக்குவதாக வாகன் ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.மதுரை புல்லூத்து பிரிவு அருகே கன்னியாகுமரி - பெங்களூரு நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே மதுரை மேலக்கால் சாலை செல்கிறது. கீழமாத்தூர், கொடிமங்கலம், மேலமாத்தூர், தாராபட்டி, மேலக்கால் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மதுரை நகருக்குள் செல்ல இந்த நான்கு வழிச்சாலையை கடந்து தான் செல்ல முடியும்.இந்த சாலை வழியாக வேலைக்கு செல்வோர், வியாபரத்திற்கு செல்வோர் என தினமும் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ், கார், ஆட்டோ, டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் மதுரைக்கு வந்து செல்கின்றனர். மேலும் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களும் இந்த நான்கு வழிச்சாலையை கடந்து தான் செல்கின்றன. போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஒரு புறம் மட்டுமே சிக்னல் உள்ளது. அதுவும் முறையாக செயல்படவில்லை. மற்றொரு புறம் சிக்னல் இல்லை. மேலும் இந்த சாலையில் மின் விளக்கும் இல்லை.

இதனால் இந்த சாலை வழியாக சென்று வருவோர் குறிப்பாக டூவீலர், ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்வோர் தினமும் விபத்தில் சிக்குகின்றனார். குறிப்பாக வெளியூரில் இருந்து நான்கு வழிச்சாலையில் பயணம் செய்யும் வெளி மாநிலத்தவர் விபத்தில் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து சிக்னல் மற்றும் விளக்குகளை அமைத்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிடப்பில் ஹைமாஸ்... இந்த சாலை சந்திப்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்க கோபுரம் அமைக்கப்பட்டு ஆறு மாதங்களாகிறது. மாவட்ட நிர்வாகத்திற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இந்த ஹை மாஸ் விளக்கிற்கான மின்கட்டணம் கட்டுவதில் உடன்பாடு எட்டப்படாததால் பணிகள் கிடப்பிலேயே உள்ளது. இதேபோல் இந்த சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் குடிமகன்கள் அதிகளவில் திறந்த வெளி பாராக பயன்படுத்துகின்னர். இதனால் இவர்கள் வாகனங்களை தாறுமாறாக ஓட்டுவதால் விபத்து அதிகரிக்க காரணமாக உள்ளது. எனவே, போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தினால் ஓரளவு விபத்தை கட்டுபடுத்தலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : motorists , Four paved, lamp, signal, motorists
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...