×

பிரதமராக 2-வது முறை பதவியேற்றபின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக நரேந்திரமோடி மாலத்தீவு, இலங்கை சென்றார். அண்டைநாடுளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைப்படி, கடந்த முறை பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, தற்போது முதல் பயணமாக நேற்று மாலத்தீவும் இன்று இலங்கையும் சென்றார். இலங்கை அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, இலங்கையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி ,ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய பிரதமர் மோடி, திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி. மத்தியில் வலுவான ஆட்சி அமைவதற்கு நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் உதவ வேண்டும் என கடவுளைப் பிரார்த்திக்கிறேன். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எல்லா உதவியும் செய்து தரப்படும். பாரதீய ஜனதா கட்சி ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். பிரதமராக 2-வது முறை பதவியேற்றபின் முதன்முறையாக பிரதமர் மோடி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடியுடன் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பின்னர் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரதமர் மோடிக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.


இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை பக்தர்கள் வருகையால் திருமலை பகுதி நிரம்பி வழிந்தது. இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பி 3 கிமீ. வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் 24 மணி நேரத்திற்கு பிறகே சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை 98 ஆயிரத்து 44 பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் நேற்றிரவு அறை கிடைக்காமல் கோயிலின் எதிரே ஆங்காங்கே இரவு படுத்து தூங்கினர்.

இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை தேவஸ்தான அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கும் ‘சர்க்கார் சகஸ்கர கலசாபிஷேகம்’ நடந்தது. இதனால் அதிகாலை முதல் காலை 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. 9 மணிக்கு பிறகு இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்றைய தரிசனத்தின்போது வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பி லேபாக்சி சந்திப்பு வரை பக்தர்கள் நின்றுகொண்டிருந்தனர். இவர்கள் 24 மணி நேரம் காத்திருந்தும், ரூ.300 டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சகஸ்கர கலசாபிஷேகம் காரணமாக திவ்ய தரிசன டிக்கெட் நள்ளிரவு 12 மணிக்கும், சர்வ தரிசன டிக்கெட் அதிகாலை 4 மணிக்கும் நிறுத்தப்பட்டது. பிரதமர் வருகையால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகை அதிக அளவில் உள்ளதால் 2 மலைப்பாதைகளிலும் 24 மணி நேரமும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags : Narendra Modi ,Tirupathi Ezhumalayyan , Tirupathi Ezhumalayyan temple, Prime Minister Narendra Modi, Sami darshan
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...