×

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் எஸ்ஓஎஸ் பாக்ஸ் பயன்படுத்த விழிப்புணர்வு இல்லை

வேலூர்: சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் சாலையின் இருபுறமும் எஸ்ஓஎஸ் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலையில் விபத்து, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட அவசர கால தொடர்புக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். இந்த பெட்டிகள் தொடர்ந்து இயங்கும் வகையில், சோலார் மின் இணைப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில், எஸ்ஓஎஸ் கால் பாக்ஸ்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் எஸ்ஓஎஸ் பாக்ஸ்கள் பயன்பாடு குறித்து பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எஸ்ஓஎஸ் பாக்ஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எஸ்ஓஎஸ் பாக்ஸ்கள் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. மேலும் எஸ்ஓஎஸ் பாக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது உள்ளிட்ட எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழில் எஸ்ஓஎஸ் பாக்ஸ் பயன்பாடுகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும். போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் எஸ்ஓஎஸ் பாக்ஸ் பயன்பாடு குறித்தும் விளக்கமளிக்க வேண்டும். அதேபோல், பெரும்பாலான எஸ்ஓஎஸ் பாக்ஸ்கள் பராமரிப்பின்றி பயன்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, எஸ்ஓஎஸ் பாக்ஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : event ,accident , National highway, accident, sos box
× RELATED ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி