×

நெல்லை பல்கலைக்கழக விளையாட்டு கிராமத்தில் தடம் தெரியாமல் மாறிய தடகளம், டென்னிஸ் மைதானங்கள்: 173 ஏக்கர் நிலம் பாழாகிறது

நெல்லை:  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமத்தில் தடகள மைதானம், கால்பந்து, டென்னிஸ் மைதானம் உள்ளிட்டவை முறையாக பராமரிப்பு பணிகள் செய்யாத காரணத்தால் தடம் தெரியாமல் புதர் மண்டி காணப்படுகிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கல்லூரிகள் இருந்து வருகிறது. இப்பல்கலைக்கழகம் மூலம் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டு கிராமம் அமைக்க பாளை கீழநத்தம் பகுதியில் 178 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் ரூ.108 கோடி நிதி மூலம் விளையாட்டு கிராமம் அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி முதற்கட்டமாக தடகளம், வட்டு மற்றும் குண்டு எறிதல் மைதானம், கால்பந்து மைதானம், டென்னிஸ் மைதானம் ஆகியவை துவங்கப்பட்ட காலக்கட்டத்தில் அமைக்கப்பட்டது.

மேலும் பல லட்ச ரூபாய் செலவில் சிந்தடிக் தள அமைப்பில் டென்னிஸ் தைானம் அமைக்கப்பட்டது. டென்னிஸ் விளையாடும்போது வீரர்கள் அடிக்கும் பந்து மைதானத்தை விட்டு வெளியில் செல்லாமல் இருக்க மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பு தடுப்பு வலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவிலும் விளையாடும் வகையில் 6 மின் கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனால் யாரும் விளையாடியதற்கான சுவடுகளே தெரியாத நிலையில் டென்னிஸ் மைதானத்தை சுற்றிலும் காடுபோல் முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மைதானத்தில் உள்பகுதியிலும் முட்செடிகள் ஊடுருவி வளர்ந்து காணப்படுகிறது. பாதுகாப்பு தடுப்பு வலைகளிலும் காட்டுச்செடிகள் கொடிவிட்டு படர்ந்து காணப்படுகிறது. பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம் பராமரிப்பு பணி செய்யாததால் பயனற்று காணப்படுகிறது.

இதுபோல் தடகளம் மைதானத்தில் வீரர்கள் ஓட்டப்பயிற்சி பெறுவதற்காக ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு அம்போ என விடப்பட்டுள்ளது. வட்டு மற்றும் குண்டு எறிதல் மைதானம், கால்பந்து மைதானமும் முட்செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. கால்பந்து மைதானத்தில் கோல் அடிக்கும் போஸ்ட் மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காட்சியளிக்கிறது. விளையாட்டு கிராமத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 178 ஏக்கர் நிலத்தில் தற்போது மாநில அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5 கோடி மூலம் முதற்கட்டமாக 5 ஏக்கர் நிலத்தில் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதில் 50 மீ நீளமும், 25 மீ அகலமும் கொண்ட ஒரு நீச்சல் குளமும், 25 மீ நீளமும், 13 மீ அகலமும் கொண்ட சிறிய நீச்சல்குளம் என இரு நீச்சல்குளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவைபோக விளையாட்டு கிராமத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மீதி உள்ள 173 ஏக்கர் நிலம் முட்செடிகள் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. துவக்க காலத்தில் அமைக்கப்பட்ட தடகள ஓடுபாதை, குண்டு மற்றும் வட்டு எறிதல், கால்பந்து மைதானம்,

ெடன்னிஸ்  மைதானம் ஆகியவை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பல லட்ச ரூபாய் செலவு செய்தும் பராமரிப்பு இன்றி பாழடைந்த நிலையில் காணப்படுகிறது விளையாட்டு ஆர்வலர்கள் புண்பட வைத்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறுகையில்; நெல்லை பல்கலைக்கழக விளையாட்டு கிராமத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 178 ஏக்கர் நிலத்தை பாதுகாக்க வேண்டும். தற்போது 5 ஏக்கரில் மட்டும் நீச்சல்குளம் அமைக்கும் பணி நடக்கிறது. மீதமுள்ள நிலத்தை கண்டும் காணாமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு ஏற்படும். தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் மனோன்மணியம் பல்கலைக்கழக விளையாட்டு கிராமம் என்ற அறிவிப்பு பலகை மட்டும்தான் காணப்படுகிறது. விளையாட்டு கிராமம் முழுமையாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பராமரிப்பின்றி காணப்படும் தடகளம், கால்பந்து, டென்னிஸ் மைதானங்களை வீரர்கள் சென்று விளையாடவும், பயிற்சி பெறும் வகையில் பராமரித்து பாதுகாக்க வேண்டும். கிராமத்தை சூழ்ந்து காணப்படும் கருவேல மரங்களை அகற்றி பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : land , Nellai, University Sport Village, Athletic, Tennis Course
× RELATED தெலுங்கானாவில் நிலப் பிரச்சனை...