×

கட்சியின் செயல்பாடுகள் பற்றி தொண்டர்கள் ஊடகங்களில் தெரிவிப்பது ஏற்புடையது அல்ல: ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் கூட்டாக அறிக்கை

சென்னை: கட்சியின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் வெளியில் தெரிவிக்கக்கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி  அறிக்கை வெளியிட்டுள்ளனர். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் 22  தொகுதியில் போட்டியிட்டு 9 இடங்களை மட்டுமே அதிமுக பெற்றது. இந்த தோல்விக்கு பிறகு அதிமுகவுக்குள் கோஷ்டி பூசல் உருவாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பிரச்னை தலைதூக்கியுள்ளது.  முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலமும் திடீரென்று போர்க்கொடி தூக்கினார். அவருக்கு 3 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் உச்சக்கட்டமாக  மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா பகிரங்கமாகவே அதிமுக தலைமை சரியில்லை, பொதுக்குழுவை உடனடியாக கூட்டி கட்சிக்கு ஒரே தலைமையை  தேர்ந்தெடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார். இதுபற்றி நேற்று அவர் மதுரையில்  அளித்த பேட்டியில், ‘‘அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை தலைமையும், 2 துணை  ஒருங்கிணைப்பாளர்களும் உள்ளனர். இரட்டை தலைமையால் கட்சியில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக தோல்விக்கு இதுவும் காரணம். திறமையான  கட்சியை கட்டுப்பாடுடன் வழிநடத்தும் ஒரே தலைமை தேவை. இரட்டை தலைமை இருக்கவே கூடாது. தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை பொதுக்குழுவை கூட்டி தோல்விக்கான காரணங்களை ஆலோசித்து,  சுயபரிசோதனை செய்து கொள்ளவில்லை.

கட்சிப்பொதுக்குழுவை உடனே கூட்டி கட்சிக்கு ஒற்றை தலைமை அதாவது அதிகாரமுள்ள பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்த கருத்துகளை நான் வெளியிடுவதால், கட்சி என்மீது நடவடிக்கை  எடுத்தாலும் அதனை ஏற்கத் தயாராக இருக்கிறேன்’’ என்றார்.  அதிமுக எம்எல்ஏ ஒருவர் கட்சி தலைமையை வெளிப்படையாக விமர்சித்திருப்பத கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜன் செல்லப்பா பேட்டி பற்றி முதல்வர் எடப்பாடி  பழனிசாமியிடம் கேட்டதற்கு, ‘‘ பேட்டியை நான் இன்னும் பார்க்கவில்லை. அதனை பார்த்த பின் தான் கருத்து  சொல்ல முடியும். அதுவும், இதுகட்சி சம்பந்தப்பட்ட பிரச்னை. அதிமுகவில் எந்த  கோஷ்டி பூசலும் இல்லை’’ என்றார். ஆனால்  அதிமுக எம்எல்ஏ ஒருவர் கட்சி தலைமை பற்றி வெளிப்படையாக விமர்சித்தது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கட்சியின் முடிவுகள் குறித்து  நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுவெளியில் பேசக் கூடாது. கடந்த சில நாட்களாக தொண்டர்கள் கட்சியின் செயல்பாடுகள் பற்றி ஊடகங்களில் தெரிவிப்பது ஏற்கத்தக்கதாக இல்லை, கருத்துகள் கூற விரும்பினால், செயற்குழு, பொதுக்குழுவில்  தெரிவிக்கலாம், அதிமுக செயல்பாடு குறித்து சிலர் கூறிவரும் கருத்துகள் ஏற்புடையது அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், அதிமுக தொண்டர்களுக்கு கட்டுப்பாடும் ஒழுங்கும் கட்டாயம் தேவை, இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட  வேண்டுகோள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Tags : Volunteers ,party ,OBC , Party, Volunteers Media, EPS, OPS
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு